Skip to main content

தன் முதல் டெஸ்ட் சதத்தை இப்போது ரசிக்கும் கங்குலி!

Published on 20/03/2018 | Edited on 20/03/2018

தான் அடித்த முதல் சதம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது கண்டுகளிக்கிறார் சவுரவ் கங்குலி.

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இந்திய அணியை பல உச்சங்களுக்குக் கூட்டிச்சென்றவர், எதற்கும் அஞ்சாதவர், அந்நிய மண்ணில் இந்தியாவை வெற்றிபெறச் செய்தவர், இமாலய சிக்ஸர்களுக்குச் சொந்தக்காரர், கிரிக்கெட் தாதா என பல விதங்களில் புகழப்பட்டவர் இவர்.

 

1996ஆம் ஆண்டு இலங்கையின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிதான் சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு முதல் போட்டி. மிகக்கடுமையான இந்தப் போட்டியில் கங்குலி சதமடித்தார். 301 பந்துகளை எதிர்கொண்ட அவர் 131 ரன்கள் எடுத்து, முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த பத்தாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 95 ரன்கள் எடுத்திருந்த ராகுல் டிராவிட் கிறிஸ் லூயிஸ் வீசிய பந்தில் அந்த சாதனையைத் தவறவிட்டார். இதுவரை 14 இந்தியர்களே அந்த சாதனையைப் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், இன்று அந்த கிரிக்கெட் போட்டியை தனது அலுவலகத்தில் வைத்து பார்த்ததாக சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில்,‘அலுவலகத்தில் இருக்கிறேன்.. நான் முதல் சதம் அடித்த போட்டி ஸ்டார் சேனலில் ஒளிபரப்பாகிறது.. இதைவிட ஒரு நல்ல நினைவு கிடையாது’ என பதிவிட்டுள்ளார். 

ஒரே நேரத்தில் மூன்று ஸ்டார்களைப் பார்க்கும் வாய்ப்பைக் கொடுத்தீர்கள் என ஒரு ரசிகர் பதிலளித்துள்ளார். இந்திய அணியின் வீரர் ஹர்தீக் பாண்டியாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.