காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் சுஷில்குமார், ராகுல் அவாரே தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டு நகரில் 21ஆவது காமன்வெல்த் போட்டிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன. இதன் எட்டாவது நாளான இன்று நடைபெற்ற மல்யுத்தப் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் களமிறங்கினர்.
இந்தியாவின் சார்பில் 74 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய சுஷில்குமார், தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் சுஷில்குமார் தொடர்ச்சியாக மூன்று முறை தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டிகளில் வெள்ளி மற்றும் தங்கப்பதக்கம் வென்றுள்ள சுஷில்குமார், 2010ஆம் ஆண்டு உலக சாம்பியனாக இருந்ததும் நினைவுகூரத் தக்கது.
அதேபோல், இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் சார்பில் 57 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய ராகுல் அவாரே தனது முதல் காமன்வெல்த் தங்கத்தை வென்றார். மகளிர் மல்யுத்தப் பிரிவில் களமிறங்கிய பபிதா குமாரி நூலிழையில் தங்கப்பதக்கத்தைத் தவறவிட்டார்.
இதன்மூலம், 14 தங்கம், 6 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.