இங்கிலாந்து அணியின் முக்கிய ஆல்-ரவுண்டர் சாம் கரன். உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடப்பெற்றிருந்த இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்தார். இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பிறகு சாம் கரன், தனக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நடைபெற்ற பரிசோதனையில் சாம் கரனுக்கு முதுகின் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சாம் கரன் விரைவில் நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் சாம் கரன் சில நாட்களில் இங்கிலாந்து திரும்புவார் என்றும், இந்த வார இறுதியில் சாம் கரனுக்கு மேலும் சோதனைகள் செய்யப்படும் என்றும், தங்களது மருத்துவ குழு சாம் கரனின் காயம் குறித்து முழுமையாக ஆய்வு செய்யும் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் இருந்து சாம் கரன் நீக்கப்பட்டதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கருதப்படுகிறது. சாம் கரன் ஐபிஎல் போட்டிகளிலிருந்து நீக்கப்படுவது சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சாம் கரனுக்கு பதிலாக அவரது சகோதரர் டாம் கரனை இங்கிலாந்து அணியில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.