நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 இருபது ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் இருபது ஓவர் போட்டி அடுத்த மாதம் 18 -ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெற இருக்கிறது. நியூசிலாந்தில் கரோனா பாதுகாப்பு வளையத்தினுள் முகாமிட்டுள்ள பாகிஸ்தான் வீரர்களில் 6 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதுகாப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடிக்காததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
நியூசிலாந்து சுகாதாரத்துறை இது குறித்து கூறுகையில், "சில வீரர்கள் கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மதிக்காமல் அவற்றை மீறியிருப்பது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. மொத்த அணிக்கும் இறுதி எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது" எனக் கூறியது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் நியூசிலாந்து சுகாதாரத்துறை மற்றும் கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, "நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது கிளப் அணி அல்ல. பாகிஸ்தான் நாட்டின் தேசிய அணி. தொடரை ரத்து செய்துவிடுவோம் என்ற கருத்தை நீங்கள் எப்படிக் கூறலாம். எங்களுக்கு நீங்கள் தேவையில்லை. இத்தொடருக்கான ஒளிபரப்பு உரிமை மூலம் கிடைக்கும் பணமும் உங்களுக்குத்தான் வருகிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் விளையாட வந்ததற்கு நீங்கள் எங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்க வேண்டும். நீங்கள் பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறீர்கள். ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். இது போன்ற கருத்துகள் கூறுவதை நிறுத்துங்கள். அடுத்த முறை ஒரு விஷயத்தைக் கூறும் போது கவனமாக இருங்கள்" எனக் கூறினார்.