தென் ஆப்பிரிக்க அணியுடனான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெடுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டது.
தென் ஆப்பிரிக்க அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய கிறிஸ்டியான் ஜோன்கர் களத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். ஆட்டத்தின் 14ஆவது சுரேஷ் ஓவரை ரெய்னா வீசியபோது, பந்தை ஸ்டம்புகளை நோக்கி வீசவேண்டாம் என தோனி கூறிக்கொண்டே இருந்தார். தொடர்ச்சியாக மூன்று பந்துகளுக்கு அவர் அந்தக் கருத்தை முன்வைத்தார். ஆனால், ரெய்னா சரியான இடத்தில் பந்தை வீசமுடியாமல் திணறினார். இதனால், ஜோன்கர் அந்த ஓவரில் பவுண்டரிகளை விளாசினார்.
பொதுவாக இந்திய அணியின் கேப்டன் யாராக இருந்தாலும், தோனி தனது தரப்பு கருத்துகளை முன்வைத்துக் கொண்டே இருப்பார். பல சமயங்களில் அவரது கூற்றுகள் உண்மையாவது உண்டு. டி.ஆர்.எஸ். சமயங்களில் தோனியின் கணிப்பு தவறியதே இல்லை. ஆட்டத்தின் நகர்வுகளை சரியாக கணிக்கும் தோனியின் கருத்துகளை பின்பற்றி பல வீரர்கள் ஆட்டத்தையே மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.