ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் புதிய கிரிக்கெட் தொடர் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் ஆண்டுதோறும் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் சீசன், வரும் 20 ஆம் தேதி ஓமன் நாட்டில் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த முதல் சீசனில் இந்தியா சார்பாக ஒரு அணியும், ஆசியா சார்பாக ஒரு அணியும், பிற நாடுகளை சேர்ந்த வீரர்களை உள்ளடக்கிய ஒரு அணியும் பங்கேற்கவுள்ளன.
இந்த முதல் சீசனில், இந்திய சார்பாக பங்கேற்கும் அணிக்கு இந்திய மகாராஜா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அணிக்காக இந்திய ஜாம்பவான்கள் சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் விளையாடவுள்ளனர். இவர்களைத் தவிர இந்திய மகாராஜா அணியில், இர்பான் பதான், யூசுப் பதான், பத்ரிநாத், ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா, நமன் ஓஜா, மன்பிரீத் கோனி, ஹேமங் பதானி, வேணுகோபால் ராவ், முனாஃப் படேல், சஞ்சய் பங்கர், நயன் மோங்கியா மற்றும் அமித் பண்டாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் ஆசியா சார்பாக களமிறங்கவுள்ள அணிக்கு ஆசியா லயன்ஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அணியில் சோயிப் அக்தர், ஷாகித் அப்ரிடி, சனத் ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன், கம்ரான் அக்மல், சமிந்த வாஸ், ரொமேஷ் கலுவிதரனா, திலகரத்ன தில்ஷான், அசார் மஹ்மூத், உபுல் தரங்கா, மிஸ்பா உல்- முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், முகமது யூசுப் மற்றும் உமர் குல் ஆகிய இலங்கை பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ளனர். பிற நாடுகளை சேர்ந்த ரெஸ்ட் ஆஃப் வேர்ல்டு அணியின் பெயரும், அதில் இடம்பெறவுள்ள வீரர்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.