இந்திய அணி வலுவிழந்த நிலையில் இருந்தபோதும், வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டு விட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாக்கார் யூனிஸ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆறு அணிகள் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கே கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கணிப்புகள் கூறின. அதேபோல், பாகிஸ்தான் வீரர்களும் சொந்த மண்ணைப் போன்ற மைதானங்கள் என்பதால், வெற்றியில் உறுதியாக இருந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி 19-ம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றது. பாகிஸ்தான் அணியின் இந்தத் தோல்வி குறித்து வீரர்கள் மட்டுமின்றி, முன்னாள் வீரர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாக்கார் யூனிஸ், “பாகிஸ்தான் அணியின் சொந்த மண்ணைப் போல துபாய் இருப்பதால், இந்திய அணி கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கான அழுத்தத்தில் இருப்பதாக உணர்ந்தேன். மேலும், இதுபோன்ற வெப்பமிகுந்த மைதானங்களில் இந்தியா அரிதாகவே விளையாடி இருக்கிறது. அதுதான் ஹாங்காங் உடன் திணறியதற்கான காரணம். ஆனால், பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் அழுத்தம் நிறைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதை என்னால் நம்ப முடியவில்லை. வலுவிழந்திருந்த இந்திய அணியை பாகிஸ்தான் சுலபமாக வென்றிருக்கலாம். ஆனால், அதை பாகிஸ்தான் தவறவிட்டது” என தெரிவித்துள்ளார்.