Skip to main content

கிரிக்கெட்டுக்காக சச்சின் அல்ல… சச்சினுக்காகத்  தான் கிரிக்கெட்...

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

கிரிக்கெட்டின் மீது ரசிகர்களுக்கு இருந்த பொதுவான பார்வையை முற்றிலும் புரட்டி போட 16 வயதான ஒரு சிறுவன் களமிறங்கினான். பேட்டிங் செய்து அணியை வெற்றிபெற வைக்க மட்டுமே கிரீசுக்கு வந்த பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில், அந்த சிறுவன் பல சமூக பிரச்சனைகள், சாதி, மத வேறுபாடுகள் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு நடுவில் இருந்த ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் வெற்றியை தீர்மானிக்கும் நம்பிக்கை நாயகனாக களமிறங்கினான். 
 

sachin

 

 

ஆம். சச்சின், இந்திய நாட்டின் கிரிக்கெட்டில் மட்டுமல்ல; இந்தியாவின் விளையாட்டுத் துறையிலும், உலக கிரிக்கெட்டிலும் ஒரு மிகப்பெரிய புரட்சிக்கு வித்திட்டார். உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.
 

“சச்சின் ஆடும்போது நாம் செய்யும் தவறுகளை கடவுள் கவனிக்கமாட்டார். ஏனென்றால் கடவுளே சச்சின் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்ற வாசகம் வெறும் புகழுக்காக சொல்லப்படவில்லை. சச்சின் ஆடிய காலங்களில் அப்படித்தான் நிலைமை இருந்தது.
 

சச்சின் ஆடும்போது ஒட்டுமொத்த இந்திய தேசமும் அவரின் பேட்டிங்கை பார்க்க காத்துக் கொண்டிருக்கும். ரயில், பஸ், டீக்கடை, பள்ளி, கல்லூரி, அலுவலகம் என எங்கு திரும்பினாலும் சச்சின்... சச்சின்... சச்சின்... என்ற ரசிகர்களின் கோஷத்துடன் மைதானத்தில் ஆடிக் கொண்டிருக்கும் சச்சினை பற்றித் தான் பேச்சு இருக்கும்.
 

சச்சின் அவுட் ஆகி வெளியேறினால் இந்தியா தோற்று விடும்; இனி மேட்ச் பார்க்க தேவையில்லை என்ற மனநிலை ரசிகர்கள் மத்தியில் நிலவியது. ஒரு கடவுளாகவே பார்க்கப்பட்டார். அவர் அவுட் ஆனவுடன் உடைக்கப்பட்ட தொலைக்காட்சிகள் பல உண்டு. 
 

“சச்சின் 98 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது சிம்லாவிலிருந்து டெல்லி செல்லும் ரயில் குறித்த நேரத்திற்கு புறப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. காரணம் சச்சின் என்ற ஒற்றை மனிதனின் சதத்தை காண பயணிகள் காத்துக் கொண்டிருந்தனர்.” என  ஆஸ்திரேலியா பத்திரிகையாளர் பீட்டர் ரோபக் ஒருமுறை தெரிவித்திருந்தார்.
 

எந்த ஒரு கிரிக்கெட் வீரரிடமும் இல்லாத எது சச்சினிடம் இருந்தது? எதன் காரணமாக ரசிகர்கள் சச்சினை கடவுளாக மாற்றினார்கள்? என்ற கேள்விக்கு மிகவும் சுலபமான பதில் காதல். ஆம். சச்சின் கிரிக்கெட்டின் மீது கொண்ட அளவற்ற காதல். 
 

கிரிக்கெட் வாழ்வில் பல சோதனைகளை சந்தித்தாலும் ஒரு முறை கூட பந்துவீச்சாளர்களை கோபத்தில் தவறாக பேசியதில்லை, மைதானத்தில் என்ன நடந்தாலும் அமைதியாக கையாளுவது அவரின் தனிச்சிறப்பு. நடுவர்களின் முடிவை மறுத்து பேசியதில்லை. இதனால் தான் சச்சின் தலைமுறைகள் கடந்தும் கிரிக்கெட் உலகில் தொட முடியாத உயரத்தை எட்டியுள்ளார். 
 

தனித்துவமான திறமை கொண்ட வீரர்கள் தன்னடக்கம் கொண்டிருப்பது அரிதான ஒன்று. ஆனால் அதை இயற்கையாகவே கொண்டிருந்தார் சச்சின்.  அவர் விளையாடிய கால கட்டத்தில் ஊக்க மருந்து சர்ச்சை, சூதாட்ட புகார்கள் போன்றவை எல்லா விளையாட்டிலும் ஆட்டிப்படைத்து வந்தது. எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான பாதைக்கு சென்ற பல நட்சத்திர வீரர்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனார்கள். ஆனால் சச்சின் நேர்மையுடன் வெற்றியும், சாதனையும் என்ற கொள்கையுடன் விளையாடி வந்தார். சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை விட சிறந்த மனிதர் என்று தன்னை மக்கள் அறிவதையே விரும்பினார்.  

இதுபோன்ற பண்புகள் தான் சச்சினை பல ஆண்டுகள் முடிசூடா மன்னனாக கிரிக்கெட்டில் வைத்துள்ளது. சச்சின் விளையாடிய காலத்திலிருந்து தற்போது வரை எத்தனையோ வீரர்கள் சில சாதனை படைத்தனர். அரிதாக படைக்கப்பட்டு வந்த சாதனைகளை ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும் செய்து காட்டினார். இன்று கிரிக்கெட்டில் பலர் புரிந்து வரும் சாதனைகளுக்கு விதை விதைத்தவர் சச்சின். அவரின் விளையாடும் நுணுக்கமும், பந்தை எதிர்கொள்ளும் விதமும், ஆடும் ஸ்டைல் போன்றவை வேறு எந்த வீரரிடமும் இல்லை. பேட்டிங்கின் பாடப்புத்தகம் என அவரின் பேட்டிங் வர்ணிக்கப்படுகிறது. 
 

ஒரு சமயம் சச்சினுக்கு டென்னிஸ் எல்போ பிரச்னை தீவிரமடைந்த நிலையில் ஊடகங்கள் `எண்டுல்கர்’ என்ற தலைப்பில் செய்திகள் வெளியிட்டு சச்சின் ஓய்வு குறித்து பேசிக் கொண்டிருந்தன. கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு தனது பேட்டின் எடை, ஆடும் ஸ்டைல் போன்றவற்றை மாற்றினார். மீண்டு வந்த சச்சின் மேலும் பல சாதனைகளை தொடர்ந்து படைத்தார்.  
 

sachin

 

 

அன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளம், பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சிகள் இல்லை. இருந்த போதும் சச்சினின் ஆட்டம் இந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் பரவிக்கிடந்தது. நகரம், கிராமம் என சச்சின் பெயரை அறியாத எவரும் இல்லை. 
 

100+ கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல; சாதி, மதம், மொழி மற்றும் பல வேறுபாடுகளை கடந்து இந்தியர்களை ஒருங்கிணைக்கும் ஒரு விளையாட்டு. அரசியல் கட்சி தலைவர், நடிகர் என யாருக்கும் கிடைக்காத புகழ் சச்சினுக்கு கிடைத்தது. அதே சமயம் யாரிடமும் இல்லாத அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு சச்சினிடம் இருந்தது.  
 

ஒவ்வொரு முறை சச்சின் களமிறங்கியபோதும் பலகோடி பேரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கினார். இவ்வளவு எதிர்பார்ப்புகளையும் ஒரு கால் நூற்றாண்டு ஆண்டுகள் பூர்த்தி செய்ய சச்சின் என்ற அபூர்வங்களின் நாயகனால் மட்டுமே முடிந்தது. இன்னும் ஆயிரம் வீரர்கள் விளையாடலாம். சில தலைசிறந்த வீரர்கள் உருவாகலாம். ஆனால் என்றும் கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் மட்டுமே.  
 

சச்சினை பற்றி பிரபலங்களின் கருத்துகள்
 

சச்சின் பேட்டிங் செய்யும் போது கவர் திசையில் இருக்கும் கேரி கிரிஸ்டனிடம் “நீ இங்கு சச்சினுக்கு எதிராக பீல்டிங் செய்து கொண்டிருக்கிறாய். அவருக்கு கைத்தட்ட அல்ல.” என்று அடிக்கடி கூறவேண்டியிருந்தது. – ஹன்ஸ் க்ரோனியே
 

நான் கடவுளை பார்த்திருக்கிறேன். இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் நான்காவதாக களமிறங்குவார். – மேத்யூ ஹைடன் 
 

சச்சின் சிறப்பாக விளையாடினார் என்றால், இந்தியாவே அன்று நன்றாக உறங்கும். – ஹர்ஷா போக்ளே 
 

கிரிக்கெட்டில் இரண்டு வித பேட்ஸ்மேன்கள் மட்டுமே உள்ளனர். ஒன்று சச்சின் டெண்டுல்கர், இரண்டாவது மற்ற வீரர்கள். – ஆண்டி ஃப்ளவர் 
 

நான் 10000 ரன்களை கடந்தவன் என்பதை பலரும் மறக்கலாம். ஆனால் சச்சினுடன் ஒரே அணியில் விளையாடியதை யாரும் மறக்க மாட்டார்கள். – ராகுல் டிராவிட்
 

பாஸ்கட் பால் என்றால் மைக்கேல் ஜோர்டன், குத்துச்சண்டை என்றால் முகம்மது அலி, கிரிக்கெட் என்றால் சச்சின் தான். – பிரைன் லாரா 
 

sachin

 

 

நாங்கள் இந்தியாவிற்கு எதிராக தோல்வியடையவில்லை, சச்சின் என்ற தனி ஒருவனிடம் தான் தோற்றோம். – மார்க் டெய்லர் 
 

சச்சின் பேட்டிங் என்றால் தனது வேலைகளை நிறுத்தி விட்டு டிவியை பார்ப்பார்கள். – பிபிசி 
 

வாக்கிங் ஸ்டிக் கொடுத்து பேட்டிங் செய்தாலும் சிறப்பான லெக் கிளான்ஸ் ஷாட் அடிப்பார். – வக்கார் யூனிஸ் 
 

பலரது கிரிக்கெட் விளையாடிய நாட்களை விட சச்சின் ஃபார்மில் இருந்த நாட்கள் அதிகம். – டேனியல் வெட்டோரி
 

சாம்பியன்கள் வரலாம், லெஜண்ட்கள் வரலாம், ஆனால் மற்றுமொரு சச்சின் வாய்ப்பே இல்லை. – டைம் இதழ் 
 

நான் அதிர்ஷ்டம் செய்தவன், சச்சினுக்கு வலைப்பயிற்சியின் போது மட்டுமே பவுலிங் செய்துள்ளேன். – அனில் கும்ப்ளே