ஐபிஎல் 2024 இன் 9ஆவது லீக் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் இளம் நட்சத்திர ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 5 ரன்களில் முகேஷ் குமார் பந்தில் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார். பின்பு பட்லருடன் சாம்சன் இணைந்தார். ஆனால் சாம்சனும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 15 ரன்களில் கலீல் அஹமது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பிறகு பட்லருடன் ரியான் பராக் இணைந்தார். அந்த இணை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பராக் அதிரடி காட்ட, பட்லர் 11 ரன்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் தடுமாறியது. அடுத்ததாக ஜுரேல் இறங்காமல், அஸ்வின் களமிறக்கப்பட்டார். அந்த முடிவு ஓரளவு சாதகமாகவே அமைந்தது. அஸ்வின் 3 சிக்சர்களுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இறங்கிய ஜுரேலும் 20 ரன்களில் வீழ்ந்தார்.
விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும், மறுபுறம் பராக் தன் அதிரடியை நிறுத்தவில்லை. 34 பந்துகளில் அரை சதம் கடந்தார். அடுத்த 11 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து டெல்லி பந்துவீச்சை சிதறடித்தார். ஹெட்மயரும் 1 சிக்ஸ் மற்றும் 1 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கி 1 ஓவர் முடிவில் 2 ரன்கள் எடுத்துள்ளது.