குல்தீப் யாதவை அணியில் சேர்க்காதது சரியான முடிவு தான் என டெஸ்ட் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் போட்டித் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் பின் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி இரண்டிலும் வெற்றி பெற்று தொடரையும் வென்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் அணியில் இடம்பெறவில்லை.
முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய குல்தீப் யாதவ் இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 8 விக்கெட்களையும் 40 ரன்களையும் எடுத்தார். ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் ஓரங்கட்டப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை வழிநடத்திய கே.எல்.ராகுல் பதில் அளித்துள்ளார். அதில், “குல்தீப்பை ப்ளேயிங் 11ல் சேர்க்காதது கடுமையான முடிவு தான். சமீபத்தில் தான் அவர் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். ஆனால், முதல் நாள் ஆட்டத்தின் துவக்கத்தில் மைதானத்தைப் பார்க்கும்போது இத்தகைய முடிவு எடுக்க வேண்டியதானது.
2 ஆவது டெஸ்ட் போட்டி நடந்த டாக்கா மைதானத்தில் நாங்கள் எடுத்த 20 விக்கெட்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகமான விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். இந்த மைதானத்தில் இரு ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளோம் அந்த அனுபவத்தை மனதில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்தோம். நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு நீளும் டெஸ்ட் போட்டியில் உங்களுக்கு சமநிலையான தாக்குதல் முறை தேவை. அதனால் குல்தீப் யாதவை அணியில் எடுக்காதது சரியான முடிவு தான்” எனக் கூறியுள்ளார்.