உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி வழிநடத்தும் அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. 35 வயதாகும் மெஸ்ஸி ஃபிஃபா உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் எனத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இதுவரை அவர் ஃபிஃபா உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய குரேஷியா உடனான ஆட்டத்தில் வென்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த மெஸ்ஸி, “இறுதிப் போட்டிக்கு மீண்டும் ஒரு முறை தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. என் உலகக்கோப்பைக்கான பயணம் முடிவிற்கு வந்துவிட்டதாகவே கருதுகிறேன். இன்னும் 4 ஆண்டுக்காலம் கழித்து வரும் அடுத்த உலகக்கோப்பை வரை விளையாட முடியுமா எனத் தெரியவில்லை. விளையாடினாலும் சிறப்பாகச் செயல்பட்டு அணியை பைனலுக்கு கொண்டு செல்வேனா என்றும் தெரியவில்லை.
நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியே என் கடைசிப்போட்டியாக இருக்கும். அதில் வெற்றி பெற்று உலகக்கோப்பையை வென்று கொடுப்பேன் என நம்புகிறேன். உலகக்கோப்பையை வெல்வது தான் முக்கிய குறிக்கோள்” என்றார்.
மேலும், குரேஷியா உடனான போட்டியில் ஒரு கோல் அடித்ததன் மூலம் உலகக்கோப்பையில் 11 முறை கோல் அடித்து அர்ஜெண்டினாவிற்காக அதிகமுறை கோல் அடித்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.