16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் இப்போட்டி நடைபெற இருக்கிறது. சென்னை மைதானம் சுழலுக்கு சாதகமானது. கடந்த போட்டியில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதின. சென்னை அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் 10 ஓவர்களை வீசி 84 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ராஜஸ்தான் அணியிலும் சுழல் பந்துவீச்சாளர்கள் 12 ஓவர்களை வீசி 95 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்நிலையில் இன்றும் ஹைதராபாத் அணியில் மார்கோ ஜென்சனுக்கு பதிலாக சுழல் பந்துவீச்சாளர் ஆதில் ரஷித் அல்லது அஹீல் ஹூசைன் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது. அதேபோல் சென்னை அணிக்கு எதிராக எப்போதும் தயாராகவே இருந்து சிறப்பாக செயல்படும் புவனேஷ்குமார் இன்றைய போட்டியில் பெரிதாக விக்கெட் வேட்டை நடத்தலாம் எனத் தெரிகிறது. ஹைதராபாத் அணியின் ஹாரி ப்ரூக் ஆபத்தான ஆட்டக்காரர் என்பதை சென்னை அணி உணரும். ஆனால் அவர் சுழலுக்கு எதிராக எப்போதும் தடுமாறியபடியே ஆடக்கூடியவர். இன்றைய போட்டியில் பவர்ப்ளேவில் கேப்டன் தோனி சுழல் பந்துவீச்சாளரை கொண்டு வந்து அது சென்னைக்கு கை கொடுத்ததென்றால் சென்னை அணிக்கு அது பெரும்பலம். இன்றைய போட்டியில் சென்னை அணியில் மாற்றங்களைச் செய்யாமல் அதே அணியுடன் களமிறங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் அணி 5 போட்டிகளில் 3ல் தோற்று இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஹைதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தர், மயங்க் மார்கண்டே, அடில் ரசித் என திறமை வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை சென்னை அணி வெற்றி பெற்றதில்லை என்றாலும் கூட, கடைசி 10 ஐபிஎல் போட்டிகளில் உள்ளூர் அணியை விட வெளியில் இருந்து ஆட வந்த அணியே வெற்றி பெற்றுள்ளது என்பது ஆறுதல் தரக்கூடியது. சென்னைக்கு வந்து ஆடிய ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதும், பெங்களூர் சென்று ஆடிய சென்னை அணி வெற்றி பெற்றதும் எடுத்துக்காட்டுகள்.
சென்னை அணியில் அனைத்து பேட்டர்களும் ஃபார்மில் உள்ளனர். கடந்த 2 போட்டிகளில் ருதுராஜ் சிறப்பாக ஆடவில்லை என்றாலும் இன்றைய போட்டியில் அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம். ரஹானே தனது பவர்ப்ளே ஸ்ட்ரைக் ரேட்டாக 222.22 என்பதை வைத்துள்ளார். இது குறைந்த பட்சமாக 50 ரன்களுக்கு. நடப்பாண்டில் ரஹானாவே அதிக ரன் ரேட் கொண்ட வீரராக உள்ளார்.