Skip to main content

மௌனமான போர்வீரன்.. மாரத்தான் இன்னிங்ஸ்களின் நாயகன்...

Published on 25/01/2019 | Edited on 25/01/2021

2018-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி. 3-வது போட்டி ஜோகன்னஸ்பர்க்கில். முதல் இன்னிங்ஸில் குட் லென்த், அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப் லைனில் வந்த ஃபிலாண்டரின் பந்தில் ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ரபாடாவின் சீம் மூவ்மென்டில் அவுட்சைடு எட்ஜில் 8 ரன்கள் எடுத்திருந்த முரளி விஜய் அவுட். மார்னே மார்கல், ரபாடா, ஃபிலாண்டர், நிகிடி என உலகின் பெஸ்ட் பாஸ்ட் ஃபவுலர்கள் அவுட்சைடு ஆஃப், குட் லென்த், சீம் மூவ்மென்ட், அதிவேக பவுலிங், ஸ்விங், பவுன்ஸர்கள் என இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை திணறடித்து வந்தனர்.

 

pp

 

 

அடுத்து புஜாராவும், விராட் கோலியும் களத்தில். தென் ஆப்பிரிக்கா அணியின் பவுலிங்கையும், மைதானத்தின் தன்மையையும் உணர்ந்த இருவரும் மிகவும் பொறுமையான ஆட்டத்தை ஆடினார்கள். இன்னிங்ஸின் 4-வது ஓவரில் களமிறங்கி 22-வது ஓவரில், தான் சந்தித்த 54-வது பந்தில் முதல் ரன்னை எடுத்தார் புஜாரா. நிதானமுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் புஜராவும், கோலியும். இந்த பார்ட்னர்ஷிப்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. புஜாரா 179 பந்துகளை சந்தித்து 50 ரன்கள் எடுத்தார். அணியின் மொத்த ஸ்கோர் 187.  அந்த போட்டியில் இந்தியா வென்றது. சச்சின், டிராவிட், லக்ஸ்மன் இல்லாத இந்திய டெஸ்ட் அணி முதன்முறையாக தென் ஆப்பிரிக்காவில் முதல் வெற்றியை பதிவு செய்தது. வெளிநாடுகளில் இந்திய அணி தற்போது பெற்றுவரும் வெற்றிகளுக்கு அடித்தளம் அந்த டெஸ்ட் போட்டி.

 

ஓவருக்கு 36+ ரன்கள், 10+ பந்துகளில் 50 ரன்கள், 30+ பந்துகளில் 100 ரன்கள் என்று பேட்ஸ்மேன்களும், 20 ஓவர்களில் 250+ ரன்கள், 50 ஓவர்களில் 400+ ரன்கள் என அணியின் ஸ்கோர்களும் அதிரடி நிறைந்த இன்றைய காலங்களில் பவுலர்களை சோதித்து வருகின்றன. டி20 போட்டிகளும், டி10 போட்டிகளும் கிரிக்கெட் ஆட்டத்தின் போக்கை மாற்றி வருகின்றன. டெஸ்ட் போட்டிகளுக்கான மவுசு குறைந்து விட்டதா என்ற கேள்வி கடந்த 15 ஆண்டுகளாக அவ்வப்போது உதித்து வருகிறது. இதுபோன்ற கேள்வி எழும்போதெல்லாம் யாரோ ஒருவரின் பேட்டிங்கும், யாரோ ஒருவரின் பவுலிங்கும், எதாவது ஒரு தொடரும் டெஸ்ட் போட்டிகளை மீண்டும் பரபரப்பாக்கும். டெஸ்ட் போட்டிகளுக்கே உரித்தான மவுசு மீண்டும் திரும்ப வரும். அப்படி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கான ஸ்பெஷல் பேட்டிங்கை வெளிப்படுத்திய புஜாராவின் பிறந்தநாள் இன்று.  

 

pp

 

2018-ஆம் ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது மாஸ்டர் கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணியை நிலைகுலைய செய்தார் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா. ‘நீங்கள் இன்னும் சலிப்படையவில்லையா?’ என்று புஜாராவை பார்த்து போட்டியின்போது கேட்டவர் நாதன் லயன். இவர்தான் தொடரில் ஆஸ்திரேலியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர். ஒரு அணியின் பெஸ்ட் பவுலரிடமிருந்து இந்த கேள்வி எழுகின்றதென்றால் பேட்ஸ்மேனின் ஆட்டம் எந்தளவிற்கு இருந்திருக்கும் என சிந்தித்து பார்க்க வேண்டும். 1174 பார்ட்னர்ஷிப் ரன்களை அணிக்கு தந்தார் புஜாரா. 1258 பந்துகளை சந்தித்து 521 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு சிம்ம சொப்பனமாக இந்த தொடரில் விளங்கினார். 

 

டிராவிட் டெஸ்டில் பேட்டிங் செய்யும்போது டிராவிட்டிற்கு எதிர்முனையில் விளையாடும் வீரர்களை அவுட் செய்வதுதான் புத்திசாலிதனம் என்பார்கள். அதுபோல இன்று புஜாரா விளையாடும்போது அவருக்கு எதிர்முனையில் விளையாடும் வீரர்களை அவுட் செய்வதுதான் சரி என்பதை தற்போது நடந்துமுடிந்த ஆஸ்திரேலியா தொடர் ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு உணர்த்தியது. 

 

2015-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய புஜாரா, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறும் போது ஒருமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 145* ரன்கள் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டார். இந்திய அணி வென்றது.

 

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு டிராவிட், லக்ஸ்மன் போன்ற சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஓய்வு பெரும் நிலையில் இருந்தபோது அணியில் ஒரு இளம் வீரராக அறிமுகமானார் புஜாரா. தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடினார். முதல் இன்னிங்ஸில் 4 ரன்களில் வெளியேறினார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் 72 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். பின்னர் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் சிறப்பாக விளையாடியதன் மூலம் அணியில் தனது இடத்தை நிரந்தரமாக்கிக் கொண்டார். டிராவிட்டின் ஒய்வுக்கு பிறகு மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்க பொருத்தமான வீரராக புஜாரா இருந்தார். 

 

பந்தை தொடாமல் கீப்பருக்கு அனுப்புவதுதான் புஜாராவின் பெஸ்ட் ஷாட் என்று சிலர் சொல்வது உண்டு. டிபன்சிவ் பேட்டிங் இவரது ஸ்பெஷல். கவர் டிரைவ், ஸ்ட்ரைட் டிரைவ், எளிதாக சிங்கில் ரன் எடுக்கும் திறமை, ஸ்பின்னர்களை தெளிவாக கணித்து ஆடுவது என இவரது டெஸ்ட் பேட்டிங் மாஸ் காட்டும்.  

 

pp

 

டிராவிட்டின் இடத்தில் விளையாடிய புஜாராவுக்கும், டிராவிட்டிற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. டிராவிட் தனது 67 இன்னிங்ஸில் 300௦ ரன்களை கடந்தார். அதேபோல புஜாராவும் தனது 67 இன்னிங்ஸில் 3000 ரன்களை கடந்தார். இருவரும் 4000 ரன்களை  84 இன்னிங்ஸிலும், 5000 ரன்களை 108 இன்னிங்ஸிலும் கடந்தனர். 2000-களில் விளையாடிய லக்ஸ்மன் இந்திய அணிக்கு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்து வந்தார். அதேபோல தற்போது புஜாரா டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரராகவும், சிறந்த டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டாகவும் உள்ளார்.

 

2012-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் போட்டியில்  மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய புஜாரா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 206* ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வைத்து வென்றது. அந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். 2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா தொடரில் இரண்டாவது போட்டியில் முரளி விஜய் உடன் 370 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 204 ரன்கள் புஜாரா எடுத்தார். இது அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. 

நிதானம், பொறுமை ஆகியவை இவரின் உடன்பிறப்புகள் என்றெ கூறுமளவுக்கு எதிரணியின் நம்பிக்கையை நின்ற இடத்திலிருந்தே சுக்குநூறாக உடைக்கக்கூடியவரான புஜாரா டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. ஆனாலும், தனது முதல் போட்டியில் அவர் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது முதல் தற்போதைய தொடரில் ஆஸ்திரேலிய வீரர்களை மூச்சிரைக்க வைத்ததுவரை என இந்தியாவின் இரண்டாவது சுவராக புஜாராவின் வளர்ச்சி அளப்பரியது என்பது மறுக்க முடியாததாகும்.