இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் என புகழப்படும் மகேந்திர சிங் தோனி, 2007ஆம் ஆண்டு தனது 26ஆவது வயதில் அந்தப் பொறுப்பேற்றார். சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், லஷ்மன் என மூத்த வீரர்கள் அனைவரும் ஓய்வுபெறும் கட்டத்தில் இருந்தபோது, மிக சவாலான சூழலில் களமிறங்கிய அந்த ஆண்டிலேயே டி20 உலகக்கோப்பையைப் பெற்றுக்கொடுத்தார்.
அதேபோல், 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை, 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை என ஐ.சி.சி. வழங்கும் அனைத்து கோப்பைகளையும் வென்ற கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக ஆன தோனி, கேப்டன் கூல் என்றும் புகழப்பட்டார். 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட், 2017ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் கேப்டன் பதவிகளில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்த அவர், அதிரடியாக விளையாடி 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்காக தயாராகி வருகிறார்.
தோனி கேப்டன் பொறுப்பேற்பதற்கு காரணமாக பலர் இருந்ததாக சொல்லப்பட்டாலும், தோனியே தனது பதவி உயர்த்தப்பட்டதற்கு சச்சின் தெண்டுல்கரும் காரணம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை உண்மையாக்கும் விதமாக சச்சின் தெண்டுல்கர் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது,
‘கிரிக்கெட் போட்டிகளின் போது எப்போதாவது ஸ்லிப் பொஷிசனில் பீல்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும். அப்போது, ஃபீல்டிங் பொஷிசன்களை முடிவுசெய்வது குறித்து நானும், தோனியும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்போம். இருவரும் ஒவ்வொருவரின் கருத்தை மாறிமாறி முன்வைத்துக் கொண்டே போவோம். இந்த உரையாடலின் போதுதான் அவர் ஒரு சிறந்த கேப்டனாக இருப்பதாக தகுதி கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன்’ என தனது நினைவுகளை வெளியிட்டுள்ளார்.