2021ஆம் ஆண்டின் இருபது ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்தியாவின் இருபது ஓவர் அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா, சில நாட்களுக்கு முன்னர் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். இந்தச்சூழலில் அவர், பயிற்சியின்போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக அடுத்து நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து, விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகப்போவதாக செய்திகள் வெளியாகின. இதனையொட்டி கேப்டன்சி விவகாரத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடையே மோதல் வெடித்துள்ளதாகவும், அதன் காரணமாகவே ரோகித் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியதாகவும், விராட் ஒருநாள் தொடரிலிருந்து விலகப்போவதாகவும் தகவல் வெளியானது.
இந்தநிலையில் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், ரோகித் மற்றும் விராட் கோலிக்கு இடையே எந்த மோதலும் இல்லை என தெரிவித்துள்ளார். விராட் கோலி ஓய்வு கேட்டதாக வெளியான தகவல் குறித்து அவர், "எனக்குத் தெரிந்தவரையில், கேப்டன்சி குறித்து முடிவெடுக்கப்படுவதற்கு முன்னரே, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி ஓய்வெடுக்க விரும்பினார்" என கூறியுள்ளார்.
அதேபோல், மோதல் காரணமாகவே ரோகித் சர்மா டெஸ்ட் தொடரிலிருந்து விலகியதாக வெளியான தகவல் குறித்து பேசிய அருண் துமால், "ரோகித் சர்மா விளையாடாததற்குக் காரணம் மருத்துவ ரீதியிலான பிரச்சனை. அவர்களிடையே எந்த மோதலும் இல்லை. ஹாம்ஸ்டிரிங் காயம் காரணமாக பிசியோதெரபிஸ்ட்கள் அவரை நீக்கியுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, விராட் கோலியை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட வைக்க, பிசிசிஐ முயற்சித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.