இந்தியாவிற்கு சுற்று பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில் ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. கடைசி வரை களத்தில் நின்று ஆடிய சஞ்சு சாம்சன் 86 ரன்களை எடுத்திருந்தார். இந்நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி ராஞ்சியில் நாளை நடைபெறுகிறது.
இந்திய அணியை பொறுத்த வரையில் சீனியர் வீரர்கள் அனைவரும் உலகக்கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றுவிட்ட நிலையில் ஷிகர் தவான் தலைமையிலான இளம் அணி களமிறங்கியுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் தொடக்க பேட்ஸ்மேன்கள் முதல் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் வரை பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். எனினும் முதல் ஒரு நாள் போட்டியில் ஆரம்பத்திலேயே 51 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது தோல்விக்கு வாய்ப்பாக அமைந்தது. நாளை நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தொடக்கத்தில் விக்கெட்களை இழக்காத வரையில் வெற்றி வாய்ப்பு என்பது இந்தியாவிற்கு அதிகமே.
தென் ஆப்பிரிக்காவில் மில்லர் மற்றும் டி காக் ஃபார்மின் உச்சத்தில் உள்ளனர். அதேபோல் அணியின் பந்துவீச்சாளர்களும் நல்ல ஃபார்மிலேயே உள்ளனர். எனினும் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா மட்டும் ரன்களை அடிக்க மிகவும் போராடுகிறார். கேப்டன் பவுமா நாளை நடைபெறும் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவரால் உலகக்கோப்பைக்கும் உற்சாகமாக தயார் ஆக முடியும்.