பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
20 ஓவர் உலகக் கோப்பைக்கான தொடரில் பாகிஸ்தான்- இந்தியா இடையிலான போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. மெல்போர்னில் இன்று நடந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்தில் பாகிஸ்தான் தடுமாறினாலும் கடைசி பத்து ஓவர்களில் 92 ரன்களை சேமித்ததால் மொத்தமாக 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 160 ரன்களை வைத்தது பாகிஸ்தான்.
பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக இருக்கும் என்ற நிலையில் 160 ரன்கள் எடுப்பது சிரமமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில் பேட்டிங் செய்த இந்திய அணி 35 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. கடைசி பத்து ஓவரில் கிட்டத்தட்ட 120 ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், இந்திய அணியின் விராட் கோலி 82 ரன்கள் எடுத்து போட்டியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அதேபோல் ஹர்திக் பாண்டியா 40 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷான் மசூத் 52 ரன்களும், இப்திகார் அகமது 51 ரன்களும் எடுத்தனர்.