8 ஆவது உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர் 12 சுற்றுகள் இன்றுடன் முடிவடைகிறது. இரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளே அரையிறுதிக்கு தேர்வாகும். முதல் பிரிவில் நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தேர்வான நிலையில் இரண்டாம் பிரிவில் அரையிறுதிக்கு செல்ல தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் இன்று காலை தென் ஆப்பிரிக்கா நெதர்லாந்து ஆடிய ஆட்டத்தில் நெதர்லாந்து வெற்றி பெற்றதால் தென் ஆப்பிரிக்க அணி தொடரில் இருந்து வெளியேறியது. இதன் பின் அரைஇறுதிக்கு செல்லும் இரண்டாம் அணியை தீர்மானிக்கும் போட்டி இன்று நடந்தது. பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆடிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதனை அடுத்து முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷாண்டோ 54 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 127 ரன்களை மட்டுமே எடுத்தது.
128 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசம் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெடுக்கு 57 ரன்களை சேர்த்த நிலையில் பாபர் ஆசம் 25 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். முகம்மது ரிஸ்வான் 32 ரன்கள் சேர்த்து அவுட்டாக பின்னர் வந்த ஹாரிஸ் மற்றும் ஷான் மசூத் ஜோடி சிறப்பாக ஆடி பாகிஸ்தானுக்கு வெற்றி தேடி வந்தது. முடிவில் பாகிஸ்தான் அணி 18.1 ஓவரில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 128 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கான வாய்ப்பினை உறுதி செய்தது.
பிற்பகல் நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாவே அணியுடன் மோத இருக்கிறது.