ஆஸ்திரேலியா உடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இதில் முதல் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற உள்ளது.
ஆசிய கோப்பையின் தோல்விக்கு பிறகான தொடர் என்பதாலும் உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணியின் பலம், பலவீனம் ஆகியவற்றை மறுபரிசோதனை செய்வதற்கு ஒரு வாய்ப்பு உடைய தொடர் என்பதாலும் இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் உலகக் கோப்பையை கவனத்தில் கொண்டு இந்திய அணி தன்னால் இயன்ற அளவு பரிசோதனைகளை மேற்கொள்ள இயலும்.
இந்திய அணியை பொறுத்த வரை கேப்டன் ரோஹித் சர்மா தெளிவாக சொல்லிவிட்டார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க போவது கே.எல்.ராகுல் தான் என்று. எனவே இந்த தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டால் உலகக்கோப்பையில் அவர் ஓரங்கட்டப்படலாம். இந்திய அணியில் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். காயத்தில் இருந்து மீண்ட பும்ரா, ஹர்ஸல் படேல் ஆகியோரின் வருகை இந்திய அணிக்கு மேலும் பலத்தை கொடுக்கும். ஆல்ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக அணியில் இல்லாததால் மொத்த பொறுப்பையும் ஹர்டிக் பாண்டியா தன் தோளில் தாங்க வேண்டும்.
ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வீரர்கள் பலர் காயம் காரணமாக ஓய்வில் இருப்பினும் அந்த அணி பலமாகவே உள்ளது. அந்த அணி எடுக்கும் முடிவுகளும் உலகக்கோப்பையை கவனத்தில் கொண்டே இருக்கும் என்பதிலும் எந்த வித ஐயமும் இல்லை. அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் கடந்த சில போட்டிகளில் ரன் எடுக்க திணறுவதால் இந்த தொடரில் தன் முழு திறனையும் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்திய அணியின் பலவீனங்களை ஆஸ்திரேலியாவும் ஆஸ்திரேலியாவின் பலவீனங்களை இந்திய அணியும் அறிந்து கொள்வது உலகக்கோப்பைக்கு உதவியாக அமையும்.
இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதுவதால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விறுவிறுப்பிற்கு எந்த வித பஞ்சமும் இருக்காது.