2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை நடத்த முன்வந்ததாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. அதன்பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் ரசிகர்கள் இன்றி தொடரை நடத்தலாம், அல்லது வெளிநாடுகளில் நடத்தலாம் என்று பிசிசிஐ திட்டமிட்டது. ஆனால் இதுவரை எந்த திட்டமும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஐபிஎல் தொடரை நடத்த நியூசிலாந்து முன்வந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில் இந்த செய்திகளில் உண்மை இல்லை என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. "இந்த செய்திகள் வெறுமனே ஊகமாகும். நாங்கள் ஐ.பி.எல். தொடரை நடத்த முன்வரவில்லை, அதேபோல இப்போதைக்கு அதற்கான திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை" என நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட் பூக் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இந்தியாவுக்கு வெளியே போட்டிகள் நடத்தப்படலாம் எனக் கூறப்படும் சூழலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கை ஆகியவை ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.