இந்தியக் கால்பந்தாட்ட வீரர் சுனில் சேத்ரி உடனான நேரலையில் தனது கடத்த காலம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுனில் சேத்ரியுடன் உரையாடிய கோலி, "நான் இதனை ஏற்கெனவே கூறியிருக்கிறேன், மாநில கிரிக்கெட்டில் ஒரு காலகட்டத்தில் நிறைய விஷயங்கள் நடக்கும். அதில் பல விஷயங்கள் நியாய தர்மத்தை மீறியதாக இருக்கும். ‘தகுதி, திறமை மட்டும் போதாது, அதற்கு மேல் சி விஷயங்கள் தேவை என ஏதாவது ஒரு சூழலில் யாராவது ஒருவர் கூறுவார். அப்படி நடந்த போது, என் தந்தைக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. என் தந்தை தெருவிளக்கில் படித்து வழக்கறிஞர் ஆனவர். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். லஞ்சம் குறித்தெல்லாம் பெரிதாகத் தெரியாதவர்.
அந்தச் சூழலில் என் தந்தை பயிற்சியாளரிடம் என்ன கூறினார் தெரியுமா? 'விராட் அவன் திறமையினால் தேர்வு செய்யப்பட்டால் நல்லது இல்லையெனில் அவன் விளையாட வேண்டாம், நான் இதையெல்லாம் செய்ய மாட்டேன்' எனத் திட்டவட்டமாகக் கூறினார். நான் அணியில் தேர்வு செய்யப்படவில்லை, நான் நிறைய அழுதேன். நான் உடைந்தே போய்விட்டேன். ஆனால் இது எனக்குப் பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்தது, உலகம் இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. முன்னேற வேண்டுமெனில் யாரும் செய்யாத ஒன்றை நாம் செய்ய வேண்டும். வாழ்வில் முன்னேறச் சொந்த கடின உழைப்பைத்தான் நீ நம்பவேண்டும் என்ற பாடத்தை இது எனக்குக் கற்றுத் தந்தது. இப்படித்தான் என் தந்தை வாழ்ந்ததை நான் பார்த்தேன், கற்றுக் கொண்டேன். எனக்குச் சரியானவற்றை, சரியான செயல்களைக் கற்றுக் கொடுத்த சம்பவமாகும் இது” என்றார்.