நடராஜன் ஒரு கடின உழைப்பாளி, அவர் ஒரு மேட்ச்வின்னர் என்கிற பாராட்டைப் பெற்றுள்ளார் தமிழ்நாடு வேகப்பந்து வீச்சாளர் நடராஜன்.
ஐபிஎல் 2024இன் 35 ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வழக்கம் போல அட்டகாசமாய் ஆரம்பித்தது. பந்துகளை சிக்சருக்கு அனுப்புவதை மட்டுமே எண்ணமாக வைத்து ஹெட் சிறப்பாக ஆடினார். 16 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
ஹெட்டின் அனுபவ பேட்டிங்கை தூக்கி சாப்ப்பிடும் அளவுக்கு அபிஷேக் ஷர்மாவின் பேட்டிங் இருந்தது. 12 பந்துகளில் 6 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பவர்பிளேயின் முதல் 6 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து, பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுத்த அணி என்கிற கொல்கத்தா அணியின் சாதனையை முறியடித்தது. ஹெட் 32 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். நித்திஷ் ரெட்டி 37, ஷபாஸ் அகமது 59 என மிரட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளும், அக்சர், முகேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் இமாலய இலக்கை எதிர்கொண்ட டெல்லி அணிக்கு தொடக்கம் சொதப்பினாலும், அந்த அணியின் ஜேக் ஃப்ரேசர் பேட்டில் இருந்து பட்டாசு சிதறுவது போல பவுண்டரிகளும், சிக்சர்களும் வெடித்து சிதறியது.18 பந்துகளில் 7 சிக்சர்கள் 5 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து அபிஷேக் பொரேல் 42, பண்ட் 41 தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 10 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஆட்டம் நிறைவடைந்த பின்பு மூத்த வீரர் புவனேஷ்வர் குமாரிடம் வெற்றி குறித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர் “இவ்வளவு ரன்களை நாங்கள் எடுத்து அதை எதிரணி துரத்தும் போது நாங்கள் அதிகமாக ரன்களை வாரி வழங்கினோம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் எங்கள் திட்டங்களை செயல்படுத்த விரும்பினோம். நீங்கள் விக்கெட் எடுக்கத் தொடங்கி விட்டால் எல்லாம் சரியாக நடக்கும். நடாரஜன் யார்க்கர் வீசுவதில் வல்லவர் என்பது எங்களுக்கு தெரியும். அவர் அமைதியான ஒரு வீரர் மற்றும் கடின உழைப்பாளி. சொல்லப்போனால் நடராஜன் உண்மையில் ஒரு மேட்ச் வின்னர். ஐபிஎல் ஆரம்பித்து இத்தனை வருடங்களில் எங்கள் பேட்டிங் இந்த அளவு சிறப்பாக இருப்பது இதுதான் முதல்முறை. இப்போது எங்களுக்கு 200 முதல் 220 ரன்களே குறைவான் இலக்கு போலத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு எங்கள் பேட்டிங் யூனிட் உள்ளது. வலைப்பயிற்சியில் அபிஷேக் மற்றும் ஹெட்டின் பேட்டிங் பயிற்சியில் பந்து வீசியதின் மூலம் என்களை மெருகேற்றிக் கொண்டோம். பேட்டிங் உங்களுக்கு ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற்றுத் தரும். பவுலிங் தான் உங்களுக்கு சாம்பியன்ஷிப்பைப் பெற்றுத் தரும்” என்றார்.