இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த ரூ. 100 கோடி மான நஷ்ட ஈடு கோரிய வழக்கில் ஜீ மீடியா பத்து நாட்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு, ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில், தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளைக் கூறியதாக ஜீ மீடியாவிற்கு எதிராக மகேந்திர சிங் தோனி வழக்கு தொடர்ந்தார். நூறு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தோனி தரப்பில் முறையிடப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, தோனி தரப்பில் எழுப்பப்பட்ட 17 கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி ஜீ மீடியா நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் மகாதவேன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சர்வதேச அளவில் புகழ்பெற்ற தோனிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை செய்தியாக வெளியிடும் போது, மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தோனி தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகள், ஆதாரங்களுக்காக எழுப்பப்பட்ட குறுக்கு விசாரணை தான் என்றும் நீதிபதிகள் கூறினர். எனவே, தோனி தரப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஜீ மீடியா நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.