19 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக்கோப்பை போட்டிகளின் அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி சிறப்பாக விளையாடி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ரன்கள் குவித்தனர். இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் அபாரமாக ஆடி சதமடித்தார்.
சிறப்பாக விளையாடிய மற்றொரு இந்திய வீரர் ஷேக் ரஷீத் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யாஷ் துல்-ஷேக் ரஷீத் இணை மூன்றாவது விக்கெட்டுக்கு 204 ரன்களை குவித்து அசத்தியது. இதனைத்தொடர்ந்து 290 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடர்ந்து நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இறுதி போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை சந்திக்கவுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்றதில்லை என்பதால், இறுதிப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என கருதப்படுகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக்கோப்பை இறுதி போட்டி வரும் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.