சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி வருகிற ஜூலை 26ஆம் தேதி, பிரான்ஸ் நாட்டின் பாரிசில் நடைபெற உள்ளது. ஜூலை 26ஆம் தேதி தொடங்கும் இந்த ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தச் சர்வதேச போட்டியில், உலகம் முழுவதும் உள்ள 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவிற்கான ஒலிம்பிக் தீபத்தை, 128 ஆண்டுகள் பழமையான மூன்று மாஸ்ட் பாய்மரக் கப்பலான பெலேம் கப்பலில் கடந்த 79 நாட்களுக்கு முன்பு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கீரிஸிலிருந்து ஏற்றப்பட்டது. அங்கிருந்து 12 நாள் கடல் பயணத்திற்குப் பின்னர் இந்த ஒலிம்பிக் தீபம், ஆயிரக்கணக்கான சிறிய படகுகள் அணிவகுப்பில் நேற்று முன்தினம் (07-05-24) பிரான்சின் மார்செய்லி பழைய துறைமுக நகரத்தில் வந்தடைந்தது. அப்போது, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், 2012-ஆம் ஆண்டின் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியன் பிளாரென்ட், 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாலாலிம்பிக் தடகள வீரர் நான்டெனின் ஆகியோர் ஒலிம்பிக் தீபத்தை எடுத்து வந்தனர். பின்னர், அதை மார்செய்லி நகரத்தில் பிறந்த ராப்பர் ஜூல் என்பவரிடம் வழங்கினார். அவர், அங்கு திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் முன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார்.
ஒலிம்பிக் தீபம், இன்று மத்தியதரைக் கடலோர நகரத்திலிருந்து புறப்பட்டு, ஜூலை 26 ஆம் தேதி தொடக்க விழாவிற்கு பாரிஸ் வருவதற்கு முன்பு பிரான்ஸ் மற்றும் ஆறு வெளிநாட்டுப் பகுதிகளுக்குச் செல்லவுள்ளது.