கிரிக்கெட்டில் பேட்டிங்கின் போது தோனி தான் தன்னுடைய சிறந்த பார்ட்னர் எனக் கோலி தெரிவித்துள்ளார்.
உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் 2900க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது. இதில் 68 பேர் உயிரிழந்துள்ளனர், 190 பேர் குணமாகியுள்ளார். இதனையடுத்து கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வது, பேட்டிகள் கொடுப்பது ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி அண்மையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் உடன் நேர்காணலில் பங்கேற்றார். அப்போது பேட்டிங்கில் தங்களது சிறந்த பார்ட்னர் யார் எனக் கோலியிடம் பீட்டர்சன் கேட்டார். அதற்குப் பதிலளித்த கோலி, "எனக்கு பொதுவாகவே வேகமாக ஓடுபவர்களை மிகவும் பிடிக்கும். அதுவும் ரன் எடுக்க முயலும்போது நம்முடன் ஆடும் பேட்ஸ்மேன் நம்மைச் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் தோனிதான் என்னுடைய சிறந்த பேட்டில் பார்ட்னர். எங்கள் இருவரின் பேட்டிங் கூட்டணி இந்திய அணிக்காக நிறைய ரன்களை சேர்த்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.