16 ஆவது ஐபிஎல் சீசனின் 27 ஆவது லீக் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடக்கிறது. இதில் பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் ஆர்.சி.பி அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்படுகிறார். கேப்டன் டுப்ளசிஸ்க்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த போட்டியில் கேப்டனாக செயல்படவில்லை.
பஞ்சாப் அணியிலும் கேப்டனாக சாம் கர்ரன் செயல்படுகிறார். தவான்-க்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டியில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சாம் கர்ரன் பேசுகையில், “கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டோம். ஷிகர் வேகமாக குணமடைந்து வருகிறார். ஆனாலும் அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடமாட்டார். அவர் சிறந்த ஆட்டக்காரர். ஆனால் இளையவர்களுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்” எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி, “டுப்ளசியால் இன்று ஃபீல்டிங் செய்ய முடியாது. அவர் வைஷாக்கிற்கு பதிலாக இம்பேக்ட் ப்ளேயராக செயல்படுவார். நாங்கள் என்ன எதிர்பார்த்தோமோ அதுவே கிடைத்துவிட்டது. நாங்கள் முதலில் பேட்டிங் தான் எதிர்பார்த்தோம்” எனக் கூறினார். ஆர்.சி.பி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் கேப்டனாக ஆடுவது ஆர்.சி.பி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.