இந்த ஆண்டு ஏப்ரல் இறுதியில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது. இங்கிலாந்தில் நடக்க இருக்கும் இந்தத் தொடருக்காக உலக கிரிக்கெட் அணிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் அடுத்தடுத்த கிரிக்கெட் போட்டிகளின் மூலம் பலப்பரீட்சை செய்யப்படுகிறது.
இந்தத் தொடருக்கான இந்திய அணியில் யார்யாரெல்லாம் இடம்பிடிப்பார்கள் என்ற கேள்விகள் எல்லோருக்குள்ளும் எழுகிறது. அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கனவு உலகக்கோப்பை இந்திய அணியை அறிவித்துள்ளார். அதில் ஆச்சர்யப்படும் விதமாக ரிஷப் பாண்ட்டுக்கு இடம் கொடுக்கவில்லை.
ஏன் இந்த ஆச்சர்யம் என்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த மாத இறுதியில் களமிறங்கும் இந்திய அணியில், தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கொடுக்கப்படவில்லை. அதேசமயம், அவருக்குப் பதிலாக ரிஷப் பாண்ட் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், அதற்கு நேரெதிராக கவாஸ்கரின் கனவு அணி அமைந்திருக்கிறது.
13 பேர் கொண்ட இந்த அணியில், “ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மா, அம்பத்தி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், ஹர்தீக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யஸ்வேந்திர செகால், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ்” ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதிக ஸ்விங் ஆகும் என்பதால் உமேஷ் யாதவ்வை ஒரு ஆப்ஷனாக வைத்துக்கொள்ளலாம் எனக்கூறியுள்ள கவாஸ்கர், கலீல் அகமது மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு இன்னும் பயிற்சி தேவை என்று குறிப்பிடுகிறார்.
தினேஷ் கார்த்திக்கின் அனுபவத்தைக் கவனத்தில் கொண்டு அவரை ஓப்பனிங் இறக்கலாம் என்றும், அஜின்க்யா ரஹானே மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரைவிட இவர் சிறப்பாக ஆடுவார் என்றும் குறிப்பிடுகிறார் கவாஸ்கர். அதேபோல், 14ஆவது வீரராக ஆல் ரவுண்டர் விஜய் சங்கரை இறக்க வேண்டும் என்பது கவாஸ்கரின் விருப்பம். மேலும், 15ஆவது வீரர் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.