அன்று முதல் இன்றுவரை நடுத்தர வயதினர் டீக்கடை, பொது நிகழ்ச்சிகள் மற்றும் இதர இடங்களில் அதிகம் விவாதிக்கும் பொருள் அரசியல், சினிமா, கிரிக்கெட். அதேபோல பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ் பயணம், பிரேக் டைம், லஞ்ச் டைம் என கிடைக்கும் நேரங்களில் எல்லாம் பேசிக்கொண்டிருப்பது கிரிக்கெட். அடுத்தபடியாக சினிமா. சமூக வலைதளங்களில் ட்ரெண்டில் உள்ள ஹேஸ்டெக்குகள், ட்ரீம் 11 போன்ற மொபைல் செயலிகள் இதை உறுதிப்படுத்துகின்றன. அன்று சச்சின், கங்குலி, டிராவிட், சேவாக்; இன்று கோலி, சர்மா, தோனி. இளைஞர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படும் வீரர்கள் இவர்கள்தான்.
விளையாட்டை பொறுத்தவரை சாதனைகள் என்பது அரிதாக நடக்கும் ஒரு நிகழ்வு. சச்சின் என்ற கிரிக்கெட்டின் கடவுள் இந்திய அணியில் விளையாடுவதற்கு முன்புவரை, கிரிக்கெட்டிலும் அப்படித்தான் இருந்தது. அவரின் வருகைக்கு பின்பு, நிலைமை மாறியது. அவர் தொன்றுதொட்டு வந்த பழங்காலத்து சாதனைகளை மட்டும் முறியடிக்கவில்லை. மாறாக, அவர் புதுப்புது சாதனைகளை ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும் படைத்தார். அந்த சாதனை மன்னன் வரிசையில் ஒருநாள் போட்டிகளில் தற்போது கோலியும், சர்மாவும் இணைந்துள்ளனர்.
1970-ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் ஆண்டு வரை 30 வருடங்களில் 105 முறை மட்டுமே ஒருநாள் போட்டிகளில் ஒரு அணி 300 ரன்களை எடுத்துள்ளது. ஆனால் 2001-2010 காலகட்டங்களில் 262 முறையும், 2011 முதல் இன்றுவரை 8 வருடங்களில் மட்டும் 301 முறையும் ஒரு அணி 300 ரன்களை எடுத்துள்ளது. எந்த அளவிற்கு கிரிக்கெட்டில் பேட்டிங்கின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்பதை புள்ளிவிவரங்கள் தெளிவாக காட்டுகின்றன.
ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் சச்சின், விராட் கோலியில் யார் சிறந்தவர் என்ற கேள்வியை உருவாக்கி, தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சச்சின் தலைமுறையின் கிரிக்கெட்டும், விராட் கோலி தலைமுறையின் கிரிக்கெட்டும் பல மாறுதல்களை சந்தித்துள்ளது. மேலும், இரண்டும் முற்றிலும் மாறுபட்ட ஒன்று. எந்த விதத்திலும் சச்சினையும் விராட் கோலியையும் ஒப்பிட முடியாது. இதை விராட் கோலி பலமுறை தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் நடைபெறும் சச்சின்-கோலி, சச்சின்-தோனி, கங்குலி-தோனி, கோலி-சர்மா, கோலி-தோனி, சர்மா-தோனி ஆகிய ஒப்பீடுகள் எந்த விதத்திலும் நியாயமில்லாத ஒன்று.
ரசிகர்கள் பொழுதுபோக்கிற்காக வேண்டுமானால் இதுபோன்ற ஒப்பீடுகளை மேற்கொள்ளலாம். உண்மையில் சச்சின், கங்குலி காலகட்டங்களில் மெக்ராத், வார்னே, டொனால்டு, அக்தர், வாசிம் அக்ரம், முரளிதரன், வக்கார் யூனிஸ், பிரெட் லீ, ஷான் பொல்லாக், ஆம்புரோஸ், வால்ஷ் என பல மிகச்சிறந்த பந்து வீச்சாளர்கள் இருந்தனர். அதேபோல் கோலி, சர்மா காலகட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களில் மலிங்கா, ஸ்டெய்ன், ஜான்சன் ஆகியோரும், தற்போது ரபாடா, ஸ்டார்க், நரைன், ரஷித் கான் ஆகியோரும் சிறந்த பவுலராக உள்ளனர். அந்த காலத்தில் பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இன்று பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
எதிரணியின் பிளஸ் மற்றும் மைனஸ், நம்முடைய அணியின் பிளஸ் மற்றும் மைனஸ், விளையாடும் மைதானத்தின் தன்மை, பேட்டிங் செய்யும்போதுள்ள அணியின் சூழ்நிலை போன்ற பல காரணிகள் ஒவ்வொரு போட்டிக்கும் மாறுபடுகின்றன. அப்படியென்றால் ஒவ்வொரு தலைமுறையிலும் எவ்வளவு மாற்றங்களை சந்தித்திருக்கும் என்பதை நாம் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.
வெவ்வேறு தலைமுறையில் விளையாடிய வீரர்களின் புள்ளிவிவரங்களை ஒப்பிடுவது முற்றிலும் தவறான ஒன்று. ஒரே தலைமுறையில் விளையாடிய வீரர்களின் புள்ளிவிவரங்களை மட்டுமே ஒப்பிடலாம். ஆனால் ஒன்று மட்டுமே மாறாதது. அன்றும் சரி; இன்றும் சரி; கிரிக்கெட்டில் பேட்டிங் சாதனைகளை எடுத்துப்பார்த்தால் அதில் ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி வீரர்கள்தான்.
அதிக ஒருநாள் போட்டிகள் விளையாடியது, அதிக ரன்கள், அதிக சதம், அதிக அரைசதம், அதிக பவுண்டரிகள் என சச்சினின் சாதனை பட்டியல் நீண்டுகொண்டே போகும். அதேபோல இந்த தலைமுறையில் அதிக ரன்கள், அதிக சதம், அதிக பவுண்டரிகள், சேசிங்கில் அதிக சதம், அதிக சராசரி என்று கோலியின் சாதனை பட்டியல் தொடர்கிறது. 2015-க்கு பிறகு தான் பங்கேற்ற 18 தொடர்களில் 13 தொடர்களில் சதம் விளாசியுள்ளார். 2016-லிருந்து இன்றுவரை 53 ஒருநாள் போட்டிகளில் 16 சதங்கள் கோலி அடித்துள்ளார்.
அதிக சிக்ஸர்கள், அதிக 150+, அதிக இரட்டை சதம், தொடர்ந்து 10 தொடர்களில் சதம் என சர்மாவும் சமீப காலங்களாக சாதனை மேல் சாதனை புரிந்து வருகிறார். 2015-க்கு பிறகு சர்மா பங்கேற்ற 17 தொடர்களில் 15 தொடர்களில் சதம் விளாசியுள்ளார். 2016-லிருந்து இன்றுவரை 53 போட்டிகளில் 14 சதங்கள் அடித்துள்ளார். கோலியும், சர்மாவும் சராசரியாக 4 போட்டிகளுக்கு ஒரு சதம் என அடித்து வருகின்றனர். இன்று இருவரும் ஒருநாள் போட்டிகளில் உலகின் தலைசிறந்த வீரர்களாக உருவெடுத்து உள்ளனர்.
மற்ற நாட்டு பேட்ஸ்மேன்கள் அதிகமாக பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் போதும். ஏனெனில், பெரும்பாலும் அந்த அணியில் பவுலிங் யூனிட் சிறப்பாக இருக்கும். ஆனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் சராசரியான பவுலிங் யூனிட்டை சரிசெய்யும் அளவிற்கு பேட்டிங்கில் ரன்களை குவிக்க வேண்டும்.
இந்திய நாட்டின் மக்கள்தொகை 137 கோடி. கிரிக்கெட் விளையாடும் மற்ற அனைத்து நாடுகளின் மக்கள்தொகையை சேர்த்தால் கூட 60 கோடி தான் வரும். இந்தியாவிற்கு அடுத்தபடியாக கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு பாகிஸ்தான். இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு மட்டுமல்ல. இந்தியர்களை ஒருங்கிணைக்கும். எந்தவொரு அரசியல் கட்சி, எந்தவொரு பிரபலம், எந்தவொரு தலைவர், எந்தவொரு நடிகர் என யாருக்கும் கிடைக்காத புகழ், பெருமை கிரிக்கெட் வீரர்களுக்கு வந்துசேரும். அதேபோல யாரிடமும் இல்லாத அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு கிரிக்கெட் வீரர்களிடம் இருக்கும்.
ஒவ்வொரு முறை வீரர்கள் களமிறங்கும்போதும் பலகோடி பேரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலையில் களமிறங்குகின்றனர். இவ்வளவு எதிர்பார்ப்புகளையும் தாண்டி அன்று சச்சின், கங்குலி, டிராவிட், சேவாக் உள்ளிட்டோர் அற்புதமாக ஆடினர். இன்று கோலி, சர்மா, தோனி ஆகியோர் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர். சூழ்நிலையின் அடிப்படையில் இவர்கள் அனைவரும் சிறந்த ஆட்டக்காரர்கள்தான்.
ஒருநாள் போட்டிகளில் சாதனைகளின் அடிப்படையில் சச்சின் அன்றும், கோலி மற்றும் சர்மா இன்றும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள். கங்குலி லீடர்சிப்பிலும், தனித்துவமான பேட்டிங்கிலும் முத்திரை படைத்தவர். இக்கட்டான சூழ்நிலையில் அணியை காப்பாற்றுவதில் டிராவிட் சிறந்தவர். சேவாக்கின் அதிரடி தனி ஸ்பெஷல். பினிஷிங்கிலும், கேப்டன்சிப்பிலும் தோனி கில்லி. ஆனால் எந்த விதத்திலும் சச்சினையும் கோலியையும் ஒப்பிட முடியாது. வெவ்வேறு தலைமுறைகளில் ஆடிய வீரர்களை புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஒப்பிடுவது முற்றிலும் தவறு என்பதே நிதர்சனம். இவ்வளவு அபூர்வம் நிறைந்த பல வீரர்கள் இந்திய அணியில் விளையாடியதை பார்த்து ரசித்தது, எந்த நாட்டு ரசிகர்களுக்கும் கிடைக்காத ஒன்று.