உலக புகழ் பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் போல் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், குடியாத்தம் கிரிக்கெட் பிரீமியர் லீக் ( ஜி சி பி எல் ) எனப் பெயரிட்டு கிரிக்கெட் அணிகள் தொடங்கப்பட்டு, 14 அணிகள் ஏலம் எடுக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதி போட்டியில் பல்வேறு துறை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே சீசன் 2 போட்டிகளுக்காண அணிகள் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி குடியாத்தம் அருகே உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. ஐபிஎல் போட்டிக்கு அணிகள் ஏலம் எடுப்பதைப் போன்று 16 அணிகள் உருவாக்கப்பட்டது. இந்த அணிகளுக்கு வீரர்கள் ஏலம் விடுகின்றனர். இதற்காக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 350 விளையாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளனர். கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்ய ஒரு அணிக்கு முப்பதாயிரம் பாயிண்ட்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் வீரர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இது குறித்து ஜிசிபிஎல் ஒருங்கிணைப்பாளர் சதிஷ் கூறும் போது, மாநிலத்தின் கடைக்கோடி நகரமான குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களை வெளி உலகத்திற்கு எடுத்துச் செல்லவே இந்த ஜிசிபிஎல் அமைப்பு உருவாக்கப்பட்டது. முதல் சீசனில் நடைபெற்ற விளையாட்டுகளில் பங்கேற்ற சித்து என்ற மாணவன் தற்போது மாநில அளவிலான அண்டர் 19 லீக் போட்டிக்கு தேர்வு ஆகி உள்ளதாகவும் எந்த விதமான வியாபார நோக்கமும் இல்லாமல் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளி கொள்வதற்காகவே இந்தப் போட்டி நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார். ஏலம் முடித்து விரைவில் போட்டிகள் தொடங்க உள்ளது.