திருச்சி மாவட்டம், இருங்களூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்று ஆள் நடமாட்டம் இல்லாத கிராமப் பகுதியில் வந்து நின்றது.
ஆம்புலன்ஸ் நிற்கக்கூடிய பகுதியானது மண் சாலை உள்ள பகுதியாக உள்ளது. அப்பகுதிச் சுற்றிலும் கருவேல மரங்கள் உள்ளன. பாதுகாப்புக் கவச உடையுடன் ஒருவர் கீழிறங்கி ஆம்புலன்ஸ் பின்பக்கக் கதவைத் திறந்து. சீக்கிரம் எடு எனக் கூறிக்கொண்டே அண்ணே இரக்கலாமா எனக்கேட்க மற்றவர் இரக்க வேண்டியதுதான் என்கிறார்.
உடனே அவருடன் முகக்கவசம், கையுறை அணிந்து கைலியுடன் இரண்டு நபர்கள் ஒரு மனித சடலத்தை இறக்குகிறார்கள். கைலி அணிந்தவர்கள் சடலத்தின் இரண்டு கைகளையும் பிடிக்க பாதுகாப்புக் கவசம் அணிந்தவர் கால்களைப் பிடித்துக்கொண்டு செல்கிறார். இதுக்கு மேல இறங்க முடியாது எனப் பேசும்பொழுது தள்ளி விட்டுப் போங்க என ஆண் குரல் கட்டளையிட சடலத்தைப் பொது இடத்தில் தூக்கிப் போடுகின்றனர்.
அந்த இடத்தில் ஒரு சிறிய குன்றுப்பாறை உள்ளது. அதன் பின்பு குழி போல இருக்கின்றது. அப்பகுதி பின்பு பனைமரம் உள்ளது. சடலத்தை தள்ளிவிட்ட உடன் வெள்ளை பவுடர் பறப்பது பதிவாகியிருக்கின்றது. இத்துடன் வீடியோ பதிவு நிறைவடைகின்றது.
இந்த வீடியோ சமூக ஆர்வலரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சடலம் இறக்கப்பட்ட இடமானது சமயபுரம் கோட்டமேடு பகுதி எனச் சொல்லப்படுகிறது. காவல்துறையினர் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை நிகழ்வுகளை ஆய்வு செய்து சம்மந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.