ஐ.பி.எல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் என்ற பட்டியலில் மும்பை அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா இணைந்துள்ளார்.
அமீரகத்தில் நடைபெற்று வரும் 13 -ஆவது ஐ.பி.எல் தொடரின் 48-ஆவது லீக் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில், மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, நேற்றைய போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி விக்கெட்டினை வீழ்த்தியதன் மூலம், ஐ.பி.எல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் என்ற சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.
இதுவரை 89 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா, 102 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், அவர் ஐ.பி.எல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 16 -ஆவது வீரர் ஆவார். ஐ.பி.எல் தொடரில் பும்ரா வீழ்த்திய முதல் விக்கெட்டும் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.