1996-ஆம் ஆண்டு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் உலகக்கோப்பை காலிறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாடியது. இந்திய அணியின் ஸ்கோர் 47 ஓவர்களில் 237/6. அடுத்த 3 ஓவர்களில் நினைத்துக்கூட பார்க்காத ஆட்டம். தன்னுடைய வேகம், யார்கர் என இறுதிகட்ட ஓவர்களில் பேட்ஸ்மேன்களை கலங்கடிக்க கூடிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் வீசிய 48 வது ஓவரில் அஜய் ஜடேஜா மற்றும் அனில் கும்ப்ளே இருவரும் சேர்ந்து 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 22 ரன்கள் விளாசினார்கள். உலகின் சிறந்த டெத் பவுலர் வக்கார் யூனிஸை கதிகலங்க வைத்தனர். அந்தப் போட்டியில் ஜடேஜா 25 பந்துகளில் அதிரடியாக விளையாடி 45 ரன்கள் குவித்தார். அவர் எடுத்த அந்த ரன்கள் மூலம் இந்திய அணி வெற்றி பெற்று அரை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
ராயல் குடும்பத்தில் இருந்துவந்த இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா 1992-ஆம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை இந்திய அணியில் பேட்ஸ்மேன், மிகச்சிறந்த பீல்டர், பார்ட் டைம் பவுலர் என முக்கிய வீரராக இருந்தார். இந்திய அணிக்காக 15 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 196 ஒருநாள் போட்டிகள் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 6 சதம் உட்பட 5359 ரன்கள் எடுத்துள்ளார். சிறந்த பந்துவீச்சாக 3 ரன்களுக்கு 3 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். 13 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தினார். அதில் 8 வெற்றி, 5 தோல்வி. தொடக்க ஆட்டக்காரர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என இந்திய அணிக்கு தேவையான இடங்களில் பேட்டிங் செய்துவந்தார்.
1997-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் 303 என்ற பெரிய இலக்கை வைத்தது இலங்கை அணி. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் விக்கெட்களை பறிகொடுத்தனர். ஜடேஜா மற்றும் அசாருதீன் ஜோடி சேர்ந்து வாஸ், முரளிதரன், மற்ற இலங்கை பந்து வீச்சாளர்களையும் திணற வைத்தனர். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்தனர். ஜடேஜா 119 ரன்களும், அசாருதீன் 111 ரன்களும் எடுத்தனர். வெற்றிக்கு குறைந்த ரன்கள் தேவைப்பட்டபோது ஜடேஜா அவுட் ஆனதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. ஆனால், இந்திய அணி விக்கெட்கள் இழந்து தடுமாறிக்கொண்டு இருந்தபோது தனது ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றதால் அந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
1999-ஆம் ஆண்டு கோகோ-கோலா கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 223 ரன்கள் இலக்கு வைத்தது இந்திய அணி. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் இழந்து 196 ரன்கள் எடுத்து வெற்றி பெரும் நிலையில் இருந்தது. அப்போது ஜடேஜா ஒரே ஓவரில் 3 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். அந்த ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பந்துவீசி இந்திய அணியை வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.
எக்ஸ்ட்ரா ரன்கள் விடுவதுபோல் விட்டு பின்னர் ரன் அவுட் செய்யும் இவரது தந்திரமான பீல்டிங் அனைவரையும் வியக்க வைக்கும். இவர் விளையாடிய காலத்தில் அசாருதீன், ராபின் சிங் மற்றும் இவரது பீல்டிங் சிறப்பு வாய்ந்தது. அசாருதீன்-ஜடேஜா ஜோடி நான்காவது மற்றும் ஐந்தாவது விக்கெட்டுக்கு அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
1999-ஆம் ஆண்டு பெப்சி கோப்பையில் இலங்கைக்கு எதிராக இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தினார். அந்தப் போட்டியில் ஜடேஜா 3-வது விக்கெட்க்கு குராசிய்யா உடன் ஜோடி சேர்ந்து 125 ரன்கள் எடுத்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்து கலக்கியுள்ளார்.
1997-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் தோர்ப்பை ரன் அவுட் செய்த விதம் அருமையான நிகழ்வு. இதுபோல பல கிளாசிக் பீல்டிங் மூலம் எதிரணியை மிரட்டுவார். பார்ட் டைம் மீடியம் பாஸ்ட் பவுலிங்கிலும் அசத்தினார். 2015-ஆம் ஆண்டு டெல்லி கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஜடேஜா நியமிக்கப்பட்டார். பிறகு ராஜினாமா செய்தார்.
ஜடேஜாவின் புன்னகை முகம் மற்றும் முக அமைப்பு பார்த்தவுடன் பிடித்துப்போகும். 2000-களில் எழுந்த மேட்ச் பிக்சிங் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை பாதித்தது. பிறகு சில படங்களிலும், சில டிவி ஷோக்களிலும் நடித்துள்ளார். இன்று ஒரு கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் விமர்சகர் என கிரிக்கெட் நிகழ்வுகளில் தொடர்ந்து தடம்பதித்து வருகிறார்.