இந்தியா வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது பந்துவீச்சால் வங்கதேச வீரர்களை சிதறடித்தார் இஷாந்த் சர்மா. 22 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். மேலும், பிங்க் நிற பந்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
கடந்த சில வருடங்களாக மிகவும் அருமையாக பந்து வீசி வருகிறார் இஷாந்த் சர்மா. விராட் கோலிக்கு பக்கபலமாகவும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக வழிநடத்துகிறார் எனலாம். பொதுவாகவே இந்திய ஆடுகளங்கள் சுழலுக்கு சாதகமாகவே இருக்கும் நிலையில் இவர் தன்னுடைய பந்து வீச்சில் அசத்தி வருகிறார். கடந்த 2018 ஆண்டு முதல் 17 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இவர் 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது சராசரி 19.79 ஆக இருந்தது. 2018 முன்பு இவரது சராசரி 36.55 ஆக இருந்தது, ஆனால் தற்போது 17 ரன்கள் வீதம் என்று இவரது சராசரி குறைந்துள்ளது. 2019 ஆண்டில் அது மேலும் குறைந்து 15.85 ஆக உள்ளது. தான் ஆடிய 13 வருடங்களில் இந்த வருடம் தான் குறைவான சராசரியை இவர் பதிவு செய்துள்ளார்.
இந்த முன்னேற்றத்திற்கான காரணத்தை கூறிய இஷாந்த் " தற்போது என்னுடைய ஆட்டத்தை ரசித்து கொண்டிருக்கிறேன். முன்னதாக என் மீது நானே அதிக அழுத்தம் போட்டுக்கொண்டிருந்தேன். அதிக விக்கெட்டுகளை வீழ்த்தவேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே இருந்தது. களத்தில் விளையாடும்போது அதிகாமாக யோசிப்பேன். ஆனால் தற்போது அனுபவம் அதிகம் வந்ததால் சூழ்நிலையை புரிந்துகொண்டு பந்து வீசுகிறேன். அதனால் தான் தற்போது நன்கு பந்து வீசுகிறேன்" என்றார்.
வங்கதேச அணியின் பவுலிங் பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோ, இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சை புகழ்ந்துள்ளார். அவர் " இஷாந்த் சர்மாவின் வளர்ச்சியை நாம் பார்க்க வேண்டும். தற்போது அவர் அபாரமாக பந்து வீசுகிறார். அவரை போல் எங்கள் வீரர்கள் பந்து வீச வேண்டும். மேலும், அவரை போல் நேரம் எடுத்து அனுபவங்களை பெறவேண்டும். அவர் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் புஜாரா போன்ற வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசுவதால், சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி விளையாட்டை அணுக வேண்டும் என்று தெரிந்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இஷாந்த் ஷர்மாவின் இந்த அபார வளர்ச்சி இந்திய அணிக்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. விராட் கோலி தலைமையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதே நிதர்சனம்.