சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஏபி டிவில்லியர்ஸ் சூப்பர் மேன், மிஸ்டர் 360 என பல்வேறு பெயர்களால புகழப்படுபவர். ஜென்டில்மேன்ஸ் கேம் என சொல்லப்படும் கிரிக்கெட்டை அதன் பெயருக்கு ஏற்றாற்போல் விளையாடி, உலக அளவில் பல்வேறு ரசிகர்களைத் தனக்காகக் குவித்தவர் அவர். சமீபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக களமிறங்கி, அதிரடியாக செயல்பட்டார்.
இந்நிலையில், இன்று வீடியோ பதிவின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக ஏபி டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார். 34 வயதாகும் அவர் கடந்த 13 ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடி வருகிறார். தனது ஓய்வுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘114 டெஸ்ட் போட்டிகள், 228 ஒருநாள் போட்டிகள், 78 டி20 போட்டிகள் விளையாடி முடித்துவிட்டேன். இது மற்றவர்கள் பொறுப்பேற்க வேண்டிய தருணம். எனக்கான வாய்ப்புகள் கிடைத்தன. நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், நான் சோர்வடைந்துவிட்டேன். எனது எரிவாயு தீர்ந்துவிட்டது’ என தெரிவித்துள்ளார்.
மேலும், இது கடினமான முடிவுதான். ஆனால், தீவிரமாக யோசித்து சரியாகவே இதை எடுத்திருக்கிறேன். சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும்போதே என் ஓய்வை அறிவித்து விடைபெற விரும்புகிறேன்’ எனவும் அவர் கூறியுள்ளார்.