Skip to main content

நான் பேட்டிங் பயிற்சியை நிறுத்திவிட்டேன்! - ஆட்டநாயகன் ஹர்தீக் பாண்டியா

Published on 07/05/2018 | Edited on 07/05/2018

ஐ.பி.எல். சீசன் 11ல் தொடர்ந்து சொதப்பலாக விளையாடி வந்த மும்பை இந்தியன்ஸ் அணி, மீதமிருக்கும் அனைத்து போட்டிகளிலும் ஜெயித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், நேற்று அந்த அணி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. 

 

Hardik

 

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன்மூலம், 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.

 

இந்தப் போட்டியில் மும்பை அணியின் ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்டியா, 20 பந்துகளில் 35 ரன்கள் விளாசி ரன்குவிப்பில் ஈடுபட்டார். அதேபோல், ஷுப்மன் கில் மற்றும் நிதீஷ் ரானா ஆகிய முக்கியமான பேட்ஸ்மென்களின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். நான்கு ஓவர்கள் பந்துவீசிய ஹர்தீக் பாண்டியா 19 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது, சேஷிங் அணிக்கு பெருத்த நெருக்கடியைக் கொடுத்தது.

 

ஆட்டமுடிவில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற ஹர்தீக் பாண்டியா, ‘நான் புதிதாக எதையும் செய்துவிடவில்லை. அதற்கான நாள் வரும் அவ்வளவுதான். நான் பேட்டிங் பயிற்சியை முழுவதுமாக நிறுத்திவிட்டேன். மாறுபட்டு அதேசமயம் நேர்மறையாக யோசிக்கக் கூடியவன் நான். ஒரு சிக்ஸர் அடித்ததும் உங்களுக்கான நேரம் வரும்; மற்ற மாற்றங்கள் தானாக நடக்கும்’ என பேசியுள்ளார். இந்த சீசனில் இதுவரை 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஹர்தீக் பாண்டியாவிற்கு, அதிக விக்கெட் வீழ்த்தியதற்கான உதா தொப்பி நேற்று வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.