கோலாகலமாக நடைபெற்று கொண்டிருக்கும் 11 வது ஐ.பி.எல் போட்டியின் 30வது ஆட்டம் நேற்று பூனேயில் நடைபெற்றது இதில் சென்னை அணியும், டெல்லி அணியும் மோதின. டெல்லி அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஷ்ரேயஸ் ஐயர் தனது முதல் போட்டியில் வெற்றிபெற்ற புத்துணர்ச்சியோடு மாற்றங்கள் இல்லாத அதே அணியாக களம் இறங்கியது. சென்ற போட்டியில் மும்பை அணியுடன் பெற்ற தோல்விக்கு பிறகு அணியில் நான்கு மாற்றங்கள் செய்தது. காயம் காரணமாக தீபக் சாஹர் ஆடவில்லை. சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹீர், ஷர்துல் தாகூர் ஆகியோர் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டு அவரக்ளுக்கு பதிலாக பாப் டுபிலிஸிஸ், கே.எம்.ஆசிப், நிகிடி, கரண் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் ஜெயித்த டெல்லி அணி சென்னையை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சனும், டுப்பிலிசிசும் களம் இறங்கினர்.
ஆட்டத்தின் முதல் பந்திலேயே வாட்சன் வெளியேறிருக்க வேண்டியது. ட்ரெண்ட் போல்ட் வீசிய பந்து காலில் பட்டு எல்.பி.டபிள்யு ஆகியிருக்க வேண்டிய நேரத்தில் அவர் பேட்டில் பந்து உள்பக்கமாக பட்டதால் ஒரு நூல் இழையில் கண்டத்தில் இருந்து தப்பினார். அதன் இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்திய வாட்சன் விஸ்வரூபம் எடுத்தார். 5வது ஓவரில் பிளன்கட் வீசிய பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து அதகளப்படுத்தினார். டுப்பிலிசிஸ்சும் ஒரு புறம் ஈடு கொடுக்க, இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறிய டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து ரன்களை வாரி வழங்கினர். பின்னர் ஆட்டத்தின் 10.5வது ஓவரில் டூ பிளசிஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரெய்னா வெறும் ஒரு ரன்னில் ஏமாற்றம் அளிக்க பின்னர் ராயுடுவும், வாட்சனும் இணைந்தனர். இதை தொடர்ந்து சிறிது நேரம் அதிரடியாக விளையாடியது இந்த ஜோடி. பின் சிறிது நேரத்தில் ஷேன் வாட்சன் 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ராயுடுவுடன் இணைந்து ரன் ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டு அதிரடியாக ஆடினர். இதனால் ரன்கள் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. டிரண்ட் போல்ட் வீசிய 16 வது ஓவரை எதிர்கொண்ட கேப்டன் தோனி தொடர்ந்து 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் ராயுடு 41 ரன்னில் அவுட்டாக, இறுதியில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. கடைசி கட்டத்தில் வெளுத்துவங்கிய தோனி 22 பந்துகளில் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி துவக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் காலின் முன்ரோ ஆகியோர் களமிறங்கினர். பிரித்வி ஷா 9 ரன்களும், காலின் முன்ரோ 26 ரன்களும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 13 ரன்களும், மேக்ஸ்வெல் 6 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து அவுட்டாகி வெளியே செல்ல மறுமுனையில் அதிரடியாக ஆடிய ரிஷாப் பாண்ட் தனது அரைசதத்தை பூர்த்தி செய்ததோடு 79 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் களம் இறங்கிய விஜய் ஷங்கர் மட்டும் தனியாக போராடி பார்த்தும் டெல்லி அணிக்கு பலன் அளிக்கவில்லை. கடைசியில் அதிரடியாக ஆடிய விஜய் ஷங்கர் 54 ரன்களும், ராகுல் டிவாடியா 3 ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மீண்டும் முதல் இடம் பிடித்தது. அதிரடியாக ஆடிய வாட்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.