Skip to main content

‘மே - 6’ கிறிஸ் கெயிலுக்கு உகந்த நாள்! - ஐ.பி.எல். போட்டி #38

Published on 06/05/2018 | Edited on 07/05/2018

ஐ.பி.எல். சீசன் 11ன் 38ஆவது கிரிக்கெட் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடக்கும் இந்தப்போட்டி, இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. 

 

KXIP

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெற்றிக் கணக்கைத் தொடங்குவதற்காக களத்திற்கு வந்த பஞ்சாப் அணி, அந்தப் போட்டியில் எதிரணியான மும்பை இந்தியன்ஸ் அணியிடம் எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவியது. இந்த சீசன் முழுக்க பின்தங்கிய நிலையில் இருந்த மும்பை அணி, இதன்மூலம் மீண்டும் ஃபார்முக்கு வந்தது. 

 

பஞ்சாப் அணியைப் பொருத்தவரை தொடக்க ஆட்டக்காரர்களைத் தவிர, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்கள் இருப்பதாக தெரியவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கெயில் மற்றும் ராகுல் இணை இதுவரை சேர்ந்து 473 ரன்கள் அடித்துள்ளனர். இது பஞ்சாப் அணி இந்த சீசனில் அடித்த மொத்த ரன்களில் 60% என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த அணியைவிடவும் இது அதிகமென்பதே, மிடில் ஆர்டர் மோசமாக இருப்பதை விளக்க போதுமானது. 

 

RR

 

ராஜஸ்தான் அணி இன்றோடு சேர்த்து இன்னமும் ஆறு போட்டிகளில் களமிறங்க இருக்கிறது. டெல்லியுடனான முந்தைய போட்டியில் தோற்றிருந்தாலும், அது ஓரளவுக்கு அந்த அணியை மீட்டு எடுத்துவந்த போட்டி என்றே சொல்லலாம். கடினமான இலக்கானாலும், அதிரடி ஆட்டத்தால் அந்த அணியில் எஞ்சியிருக்கும் நம்பிக்கை வெளிவந்திருக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றிபெறுவதன் மூலம் அந்த அணி ஹாட்ரிக் தோல்வியில் இருந்து தப்பிக்க முயற்சிக்கலாம்.

 

Chris

 

இந்த இரண்டு அணிகளும் மோதியுள்ள 15 போட்டிகளில் ராஜஸ்தான் ஒன்பது முறை வெற்றிபெற்றிருக்கிறது. இந்தூர் மைதானத்தில் 3 - 2 என பஞ்சாப் முன்னிலையில் இருந்தாலும், ராஜஸ்தானுக்கு அது சாதகமான மைதானம்தான். ஐ.பி.எல். வரலாற்றில் கிறிஸ் கெயில் மே - 6ஆம் தேதியில் அடித்த ரன்கள் 107, 26, 61, 38, 117. எனவே, இன்றைய நாள் கெயிலிடம் வானவேடிக்கைகளை எதிர்பார்க்கலாம்.

 

இந்தூர் மைதானம் சேஷிங் செய்ய உகந்தது. மிக சிறிய மைதானம் என்பதால், சின்னச்சின்ன தவறுகளும் அதிக விலை கொடுக்கச் செய்திடும். யார் அதிக விலை தருவார்கள் என்பதை இரவு பார்க்கலாம்.