Skip to main content

கபில்தேவ் ஆகவேண்டும் என ஒருபோதும் விரும்பியதில்லை! - ஹர்தீக் பாண்டியா

Published on 20/08/2018 | Edited on 20/08/2018

தான் கபில்தேவ் ஆகவேண்டும் என ஒருபோதும் விரும்பியதில்லை என இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்தீக் பாண்டியா தெரிவித்துள்ளார். 


 

Pandya

 

 

 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் செயல்பாடு, ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களை திருப்திப் படுத்தவில்லை என்பதால் பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். குறிப்பாக, இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்டியாவை அடுத்த கபில்தேவ் என வர்ணிப்பது சரியல்ல.. என ஹர்பஜன் சிங் போன்றோர் விமர்சித்தனர். அதேபோல், ஹர்தீக் பாண்டியா ஆல்ரவுண்டர் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை என்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்திருந்தார். 
 

இந்நிலையில், நாட்டிங்காமில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. அதில் ஹர்தீக் பாண்டியா முதன்முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி ஆல்-அவுட் ஆவதற்கு பாண்டியாவின் பங்களிப்பு பெரிதும் உதவியது. இதையடுத்து, போட்டி முடிந்ததும் பேசிய அவர், “என்னை ஹர்தீக் பாண்டியாவாகவே இருக்க விடுங்கள். பாண்டியாவாக நான் சிறப்பாக விளையாடுகிறேன். 41 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டெஸ்ட் போட்டிகளில் நான் நானாகவே விளையாடி இருக்கிறேன்; கபில்தேவாக இல்லை” என குறிப்பிட்டார்.