இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்கம் முதல் சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. அந்த அணியின் ஹண்ட்ஸ்கோம்ப் அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாஹல் 42 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா என இரு நாடுகளிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் இம்ரான் தாஹிர் மட்டுமே இந்த இரு நாடுகளிலும் 5 விக்கெட்டுகளை எடுத்த ஒரே வீரராக இருந்தார்.