இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்த நிலையில் அஷ்வின் வெளியில் அமர்த்தப்பட்டுள்ளார். ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் ப்ளேயிங் 11: ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோஹ்லி, ரஹானே, ஸ்ரீகர் பரத், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகம்மது ஷமி, சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இரு நாட்டு வீரர்களும் தங்களது கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ஆட்டத்தின் 3.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவாஜா சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆஸி அணி 71 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது 43 ரன்களில் வார்னர் தனது விக்கெட்டை இழந்தார். சிறிது நேரத்தில் லபுசானேவும் தனது விக்கெட்டை பறிகொடுக்க ஆஸி அணி 76 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
பின் இணைந்த ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ட்ராவிஸ் ஹெட் ஒரு நாள் ஆட்டம் போல் ஆடி வெளிநாட்டு மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். முதல் நாள் முடிவில் ஆஸி அணி 3 விக்கெட்களை இழந்து 327 ரன்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 146 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களும் எடுத்து ஆடி வருகிறார்கள். இந்திய அணி சார்பில் ஷமி, சிராஜ், ஷர்துல் தலா 1 விக்கெட்களை எடுத்தனர்.