16 ஆவது ஐபிஎல் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பரபரப்பாக நடந்த லீக் ஆட்டங்களில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. அதன்படி குஜராத், லக்னோ, மும்பை, சென்னை அணிகள் ப்ளே ஆஃப் போட்டிக்கு தகுதி பெற்றது. முதல் குவாலிஃபயர் போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இதில் சென்னை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை அணி வெற்றி பெற்று இரண்டாவது குவாலிஃபயர் போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் மும்பை குஜராத் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி இமாலய வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும் ஹர்திக் தலைமையிலான குஜராத் அணியும் மோதுகின்றன.
சென்னை அணி தனது 10 ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் இன்று குஜராத்துடன் மோதுகிறது. 2011 ஆம் ஆண்டு முதல் நடந்த 12 இறுதிப் போட்டிகளில் 9 முறை குவாலிஃபயர் 1ல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முதலில் தகுதியான அணியே வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும் குஜராத் அணி வலுவான அணியாகவே உள்ளது. குஜராத் அணி வெற்றிகரமான அணியாக இருப்பதன் காரணம் அந்த அணியின் பந்துவீச்சு. நடப்பு சீசனில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ஷமி (28), ரஷித் கான் (27), மோஹித் சர்மா (24) மூவரும் குஜராத் அணியில் உள்ளனர். அதேபோல் பேட்டிங்கிலும் சுப்மன் கில் அசத்தி வருகிறார். நடப்பு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் 3 சதம், 4 அரைசதம், 5 முறை 30+ ரன்கள் என மொத்தம் 851 ரன்களை எடுத்து சுப்மன் கில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 33 சிக்ஸர்களை அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்றபடி ஹர்திக், சஹா, விஜய் சங்கர், சாய் சுதர்சன், டேவிட் மில்லர் என அனைவரும் நல்ல ஃபார்மிலேயே உள்ளனர். நினைக்கும் போதெல்லாம் சிக்ஸர் அடிக்கும் ரஷித் கான் இறுதி ஓவர்களில் குஜராத் அணியின் நம்பிக்கையாக இருப்பார்.
சென்னை அணியை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ், கான்வே சிறப்பான தொடக்கத்தை அமைத்து வருகிறார்கள். சென்னையின் கேப்டன் தோனி மிக முக்கியமான போட்டிகளில் ப்ளேயிங் 11ல் மாற்றத்தை கொண்டு வருவார். அல்லது ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் யாரும் எதிர்பாரா வகையில் சில திட்டங்களை செயல்படுத்துவார். அவர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டபோதும் ஐபிஎல் போட்டிகளிலும் இதுபோன்று பலமுறை செயல்படுத்தியுள்ளார். இது சில முறை பயன் தராமல் இருந்தாலும் பலமுறை தோனிக்கு வெற்றிகரமான ஒன்றாகவே அமைந்துள்ளது. அதேபோல் இன்றும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். மற்றபடி பந்துவீச்சில் தேஷ்பாண்டே (21), பதிரானா(17), சாஹர்(12), ஜடேஜா(19), மொயின் அலி (9), தீக்ஷனா (11) நல்ல ஃபார்மிலேயே உள்ளனர்.
குஜராத் மைதானத்தை பொறுத்தவரை நடப்பு சீசனில் முதலில் பேட் செய்த அணியின் சராசரி 193 ரன்களாக உள்ளது. இதில் 5 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாக உள்ளதால் இரு அணியும் முதலில் பேட்டிங் செய்வதையே விரும்பும். எனவே இன்றைய போட்டியில் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பாதிப்பு இருக்காது.