16 ஆவது ஐபிஎல் தொடரின் 70 ஆவது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் குஜராத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 197 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்களை எடுத்தார். குஜராத் அணியில் நூர் அகமத் 2 விக்கெட்களையும் ரஷித் கான், யஷ் தயாள், ஷமி தலா 1 விக்கெட்களை எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 198 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கில் 104 ரன்களைக் குவித்தார். விஜய் சங்கர் 53 ரன்களை அடித்திருந்தார். பெங்களூர் அணியில் சிராஜ் 2 விக்கெட்களையும் வைஷாக் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 1 விக்கெட்டை எடுத்திருந்தனர்.
இன்றைய போட்டியிலும் பெங்களூர் அணியின் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார். 16 முறை டக் அவுட்டாகி இரண்டாவது இடத்தில் ரோஹித் சர்மா உள்ளார். இன்றைய போட்டியில் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் சதமடித்ததன் மூலம் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சதமடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தனர். இந்த போட்டியில் குஜராத் அணி வென்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.