இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்கம் முதல் சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. அந்த அணியின் ஹண்ட்ஸ்கோம்ப் அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாஹல் 42 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் 231 என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் ரோஹித் சர்மா 9 ரன்களிலும், தவான் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் இந்திய கேப்டன் கோலியும், தோனியும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோலி ஆட்டமிழக்க அடுத்து வந்த கேதார் ஜாதவ், தோனியுடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய இந்த ஜோடி 121 ரன்கள் அடித்தது. 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் 234 ரன்கள் எடுத்து இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு கோப்பையையும் கைப்பற்றியது. இந்திய அணியில் அதிகபட்சமாக தோனி 87 ரன்கள் அடித்தார். தோனியுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய கேதார் ஜாதவ் 61 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. சிறப்பாக பந்துவீசிய சாஹல் ஆட்டநாயகன் விருதினையும், தோனி தொடர்நாயகன் விருதினையும் பெற்றனர்.