ஒரு நாட்டில் பிறந்து ஏதேனும் சில காரணங்களால் வேறு நாட்டிற்கு குடிபெயர்ந்து அந்த நாட்டின் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து சில வீரர்கள் விளையாடி வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு விளையாடும் வீரர்களில் 10–க்கும் மேற்பட்ட வீரர்கள் வேறு நாடுகளில் பிறந்தவர்கள். இதில் 6 வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு விளையாடி வருகின்றனர்.
இம்ரான் தாஹிர்:
இம்ரான் தாஹிர் பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தவர். 1998-ஆம் ஆண்டு அண்டர்-19 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி சார்பாக விளையாடினார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய வம்சாவளியை சேர்ந்த சுமையா தில்தர் என்ற பெண்ணை சந்தித்தார். பின்னர் காதல் செய்து திருமணம் செய்து கொண்டார்.
2005-ஆம் ஆண்டு அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். தென் ஆப்பிரிக்கா அணியில் 2011-ஆம் ஆண்டு ஒருநாள் அணியில் இடம்பிடித்தார். இதுவரை 99 ஒருநாள் போட்டிகளில் 164 விக்கெட்கள் எடுத்துள்ளார்.
இயான் மோர்கன்:
மோர்கன் அயர்லாந்தில் பிறந்தார். அயர்லாந்து அண்டர்-13, அண்டர்-15, அண்டர்-17 ஆகிய அணிகளின் கேப்டனாக அணியை வழிநடத்தியுள்ளார். 2006-ஆம் ஆண்டு அண்டர் 19 அயர்லாந்து அணியின் கேப்டனாக இருந்தார். 2006-ஆம் ஆண்டு முதல் மிடில்செக்ஸ் அணியில் விளையாடி வந்த மோர்கன், 2009-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு விளையாட தொடங்கினார். 223 ஒருநாள் போட்டிகளில் 7034 ரன்கள் எடுத்துள்ளார்.
ஜேசன் ராய்:
தென் ஆப்பிரிக்காவில் டர்பன் எனும் இடத்தில் பிறந்தவர் ராய். அவருக்கு 10 வயதிருக்கும்போது அவரது குடும்பம் இங்கிலாந்து நாட்டுக்கு குடிபெயர்ந்தது. பின்னர் சர்ரே என்ற இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட் அணிக்கு அண்டர் 11 முதல் அண்டர் 19 வரை விளையாடி வந்தார். இதுவரை இங்கிலாந்து அணிக்கு 77 ஒருநாள் போட்டிகளில் 2992 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 40.98.
பென் ஸ்டோக்ஸ்:
நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் எனுமிடத்தில் பிறந்த ஸ்டோக்ஸ் தனது 12 வயதில் இங்கிலாந்து நாட்டிற்கு குடியேறினார். அங்கு இவரது தந்தை ரக்பி விளையாட்டின் பயிற்சியாளராக இருந்தார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தனது ஆல்ரவுண்டர் திறமையால் சிறப்பாக விளையாடிய ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்கு 2011-ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். 85 ஒருநாள் போட்டிகளில் 2306 ரன்கள், 65 விக்கெட்கள் எடுத்துள்ளார்.
மொயின் அலி:
இவர் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர். மொயின் அலியின் தாத்தா பாகிஸ்தான் மிர்பூரி சமூகத்தை சேர்ந்தவர். பாட்டி இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். 2014-ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். 97 ஒருநாள் போட்டிகளில் 1694 ரன்கள், 80 விக்கெட்கள் எடுத்துள்ளார்.
டாம் கரன்:
கரன் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் பிறந்தார். இவரது தந்தை ஜிம்பாப்வே அணியில் விளையாடியுள்ளார். பள்ளி படிப்பை ஜிம்பாப்வேவில் படித்து வந்தார். சிறப்பாக கிரிக்கெட் விளையாடி வந்த இவர் இங்கிலாந்தில் கல்லூரி படிப்பை தொடர்ந்தார். அங்கு உள்ளூர் போட்டிகளில் சர்ரே அணிக்கு விளையாடி வந்தார். 2017-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு விளையாட தொடங்கி, 17 ஒருநாள் போட்டிகளில் 178 ரன்கள், 27 விக்கெட்கள். 44.50 பேட்டிங் சராசரி வைத்துள்ளார்.
ஜோஃப்ரா ஆர்ச்சர்:
ஆர்ச்சர் வெஸ்ட் இண்டீஸ் பார்படோஸ் பகுதியில் பிறந்தார். இவரது தந்தை இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் அண்டர் 19 அணிக்கு விளையாடி வந்தார். இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தார். 2022 வரை இவர் இங்கிலாந்து அணியில் விளையாட முடியாத நிலை இருந்தது. பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சில விதிகளில் மாற்றம் செய்ததால், தற்போது இங்கிலாந்து உலகக்கோப்பை அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார்.
காலின் டி கிரான்ட்ஹோம்:
ஜிம்பாப்வே நாட்டின் ஹராரேவில் பிறந்தார். ஜிம்பாப்வே அணிக்கு அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் 2004-ஆம் ஆண்டு விளையாடினார். நியூசிலாந்து உள்ளூர் அணியான ஆக்லாந்து அணிக்கு 2007-ஆம் ஆண்டு முதல் விளையாடி வந்தார். 2012-ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து அணிக்கு விளையாடி வருகிறார். 28 ஒருநாள் போட்டிகளில் 443 ரன்கள், 18 விக்கெட்கள் எடுத்துள்ளார்.
காலின் முன்ரோ:
தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் பிறந்தார். பள்ளி படிப்பிற்காக நியூசிலாந்து நாட்டிற்கு இடம்பெயர்ந்தார். 2006-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நியூ சிலாந்து அணிக்கு அண்டர் 19 அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தினார். 2013-ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து அணிக்கு விளையாடி வருகிறார். 51 ஒருநாள் போட்டிகளில் 1146 ரன்கள், 7 விக்கெட்கள் எடுத்துள்ளார்.
இஷ் சோதி:
இந்தியாவின் பஞ்சாப்பில் பிறந்தவர். நான்கு வயதில் இவரது குடும்பம் நியூசிலாந்து நாட்டிற்கு சென்றனர். உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடி வந்த சோதி 2013-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு விளையாட தொடங்கினார். தான் பிறந்த இந்திய அணிக்கு எதிராக 4 விக்கெட்கள் எடுத்துள்ளார். இதில் 2 முறை விராத் கோலியை வீழ்த்தியுள்ளார். 30 ஒருநாள் போட்டிகளில் 39 விக்கெட்கள் எடுத்துள்ளார்.
உஸ்மான் கவாஜா:
பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத்தில் பிறந்தார். 5 வயதாக இருக்கும் போது அவரது குடும்பம் நியூ சௌத் வேல்ஸ் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். 2008-ஆம் ஆண்டு முதல் உள்ளூர் அணியான நியூ சௌத் வேல்ஸ் அணிக்கு விளையாடி வந்தார். 2011-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். இதுவரை 31 ஒருநாள் போட்டிகளில் 1238 ரன்கள், 44.21 சராசரி.