Skip to main content

டி-20 உலகக்கோப்பை; அபார வெற்றி பெற்ற இந்திய அணி!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
indian team amazing win in T-20 World Cup

டி20 உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நேற்று முன்தினம் (27.06.2024) இரவு கயானாவில் நடைபெற்றது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 171 ரன்களை சேர்த்தது. 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக இங்கிலாந்து அணி 16 ஓவர்கள் 4 பந்துகளில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான 2வது அரையிறுதிப்போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. 

இந்த நிலையில், இன்று (29-06-24) நடைபெறும் டி-20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியோடு மோதும் இந்தியா அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, 5 பந்துகளில் 2 பவுண்டரிகள் அடித்து 9 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் ஹோலி, 59 பந்துகளில் 2 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடித்து 76 ரன்கள் எடுத்து அவுட்டாகி மைதானத்தை விட்டு வெளியேறினார். அக்ஸர் படேல் 47 ரன்கள் எடுத்தும், சிவம் துபே 27 ரன்கள் எடுத்தும் அவுட்டானார்கள். இறுதியாக இந்தியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

இந்திய அணிக்கு எதிராக பந்து வீசிய தென்னாப்பிரிக்கா அணியின் மகாராஜ் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர். மேலும், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.  

இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது. அதில், குயின்டன் டி காக் 31 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்சர்கள் எடுத்து 39 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹென்ரிச் கிளாசென் 27 பந்துகளில் 2 சிக்சர்கள் 5 பவுண்டரிகள் அடித்து 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 21 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்சர்கள் அடித்து 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியாக 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தனர். இதன் மூலம், டி-20 உலகக்கோப்பை 2024 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது. மேலும், டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது.