இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இழந்திருக்கிறது. முதல் போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று, அடுத்த இரண்டு போட்டிகளில் படுமோசமாக தோல்வியைச் சந்தித்தது. செய்யும் தவறுகளை சரிசெய்து கொள்ளவில்லை என்றால், அணி நிர்வாகம் அணியில் சில மாற்றங்களை ஏற்படுத்தத் தயங்காது என கேப்டன் விராட் கோலி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், லீட்ஸ் போட்டியில் நடைபெற்ற போட்டியின் தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, கே.எல்.ராகுல் நீக்கம் மிக மோசமான நடவடிக்கை என விமர்சித்தார். ஒருவேளை நான் இருந்திருந்தால் கண்ணை மூடிக்கொண்டு ராகுலுக்கு வாய்ப்பு வழங்கியிருந்திருப்பேன். அணி நிர்வாகம் வீரர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்குவதில்லை. மான்செஸ்டரில் கே.எல்.ராகுல் விளாசிய சதத்திற்குப் பிறகும் அவர்மீது நம்பிக்கை வைக்காமல் விட்டது தவறான முடிவு. ரகானேவையும் இதேபோலவே நடத்துகிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார்.
அதேபோல், அணியின் முதல் நான்கு வீரர்களாக யாரெல்லாம் களமிறங்குவார்கள் என்ற தெளிவில்லாமல் இருப்பதாக குற்றம்சாட்டிய கங்குலி, தோனி மற்றும் ரெய்னா குறித்தும் கடுமையாக சாடினார். தோனிக்கு சரியான இடம்கொடுத்து அவரைக் களமிறக்கினால், அவர் அதைப் பயன்படுத்தி அணிக்கு பக்கபலமாக இருக்கவேண்டும். ஆனால், அவர் அதை செய்யவில்லை. ஒரு வருடமாக அணியில் இருந்தும் அவர் செய்வதெல்லாம் மிகக்குறைவுதான். ஒருவேளை உலகக்கோப்பைக்கான அணியில் அவர் இருந்தால் இன்னும் கூடுதலாக அவர் தன்னை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.