
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கவுரவிக்கும் விதமாக ஐசிசி ஹால் ஆப் ஃபேம் விருது வழங்கி கவுரவிக்கிறது. தனது வாழ்நாளில் கிரிக்கெட்டுக்காக மிகச்சிறப்பாக செயல்பட்டு, அந்த விளையாட்டை மேம்படுத்த பங்காற்றியவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விருதினை ராகுல் ட்ராவிட், ரிக்கி பாண்டிங் மற்றும் க்ளேயர் டெய்லர் ஆகியோருக்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம் என்றார் ஐ.சி.சி. மூத்த செயலதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன்.
முன்னாள் கேப்டன்களான இந்தியாவின் ராகுல் ட்ராவிட், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் க்ளேயர் டெய்லர் ஆகியோருக்கு விருது வழங்கும் விழா அயர்லாந்தின் டப்ளினில் கோலாகலமாக நடைபெற்றது. இந்தியாவில் இருந்து இந்த உயரிய விருதைப் பெறும் ஐந்தாவது வீரர் என்ற பெருமையை ராகுல் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் பிஷன் சிங் பேடி, சுனில் கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் அணில் கும்ப்ளே ஆகியோர் மட்டுமே இந்த விருதினைப் பெற்றுள்ளனர். இருந்தாலும், கிரிக்கெட்டின் கடவுள், பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர் என கிரிக்கெட் உலகை ஆட்டிப்படைத்த இந்தியாவின் சச்சின் தெண்டுல்கருக்கு ஏன் இந்த விருது வழங்கப்படவில்லை என்ற கேள்வி எழலாம்.
காரணம் இதுதான்..
ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மேட்டுகளில் இருந்தும் ஓய்வுபெற்று, முழுவதுமாக ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். அதன்படி, சச்சின் தெண்டுல்கர் இன்னமும் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது ஓய்வை அறிவித்த அவர், ஐசிசி ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் இடம்பெற வரும் நவம்பர் வரை பொறுத்திருக்க வேண்டும்.