இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் உளவுக் கேமராவால் ரகசியமாக படம் பிடித்தது. அந்த காணொலியில் சேத்தன் சர்மா பேசிய பல சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளியாகி பல அதிர்வலைகளை நாடெங்கும் ஏற்படுத்தியது.
இந்த காணொலியில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் பலர் உடல் தகுதியை நிரூபிக்க ஊக்க மருந்து பயன்படுத்தியதாகவும் ரோஹித் சர்மா மற்றும் விராட் இடையே ஈகோ பிரச்சனை இருந்ததாகவும் கூறி இருந்தார். மேலும், விராட் கோலியின் ராஜினாமா குறித்து கங்குலி விராட்டிடம் ஆலோசனை செய்யும்படி கூறினார். ஆனால் அது விராட்டிற்கு கேட்டதாக தெரியவில்லை என்பன போன்ற பல சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி இருந்தார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடற்தகுதியை நிரூபிக்க ஊக்க மருந்துகளை பயன்படுத்தியதாகவும் கூறியிருந்தார்.
தொடர்ந்து இந்திய அணியின் பல விஷயங்களை கசிய விட்டதாக சேத்தன் சர்மா மீது பல புகார்கள் எழுந்தன. ஆனால், இந்த சம்பவம் நிகழ்ந்து இரு தினங்கள் ஆகியும் பிசிசிஐ நிர்வாகிகள் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பிசிசிஐயின் தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். இதனைத் தொடர்ந்து சேத்தன் சர்மாவின் ராஜினாமாவை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்றுக்கொண்டார்.