இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடி வருகிறது. டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். நடந்து முடிந்த டி20 தொடரில் இந்திய அணி 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. தொடர் நாயகனாக அக்ஷர் படேல் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று கவுஹாத்தியில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. கேப்டன் ரோஹித் சர்மாவும் சுப்மன் கில்லும் வலுவான கூட்டணி அமைத்து நிலையாக ரன்களை சேர்த்தனர். 19.4 ஓவர்களில் இந்திய அணி 143 ரன்களை சேர்த்த நிலையில் சுப்மன் கில் 70 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 67 பந்துகளில் 83 ரன்கள் குவித்து வெளியேறினார்.
இதன் பின் களத்திற்கு வந்த விராட் கோலி பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தார். மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் என அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் விராட் கோலி தனது ரன்களை சேர்த்துக் கொண்டே இருந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராட் கோலி சர்வதேச அரங்கில் தனது 45 ஆவது சதத்தை பதிவு செய்தார். அதுமட்டுமின்றி இந்திய மண்ணில் நடந்த ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 20 சதங்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. அதை இன்று விராட் சமன் செய்தார்.
தொடர்ந்து ஆடிய அவர் 48.2 ஓவர்கள் இருக்கும்போது 113 ரன்கள் எடுத்து வெளியேறினார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 373 ரன்களை குவித்துள்ளது.